தமிழ்நாடு (Tamil Nadu)

கடலுக்கு செல்ல ஆயத்தமாகும் விசைப்படகு மீனவர்கள் தேவையான உபகரணங்களுடன் ஆயத்தமாகி வரும் காட்சி. 

மீன்பிடி தடைகாலம் இன்று நள்ளிரவு நிறைவு- கடலுக்கு செல்ல ஆயத்தமாகி வரும் ராமேசுவரம் மீனவர்கள்

Published On 2024-06-14 05:17 GMT   |   Update On 2024-06-14 05:17 GMT
  • ராமேசுவரம், பாம்பன், மண்டபம் உள்ளிட்ட துறைமுகங்களில் 1,500-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் அந்தந்த துறைமுகங்களில் நிறுத்தப்பட்டது.
  • தடைகாலம் நிறைவடைந்தவுடன் அனைத்து படகுகளும் கடலுக்கு மீன்பிடிக்க செல்லும் என மீனவ சங்கத்தினர் தெரிவித்தனர்.

ராமேசுவரம்:

தமிழகத்தில் மீன்கள் இனப்பெருக்க காலமாக கருத்தப்படும் ஏப்ரல் 15 முதல் ஜூன் 15 வரை விசைப்படகுகள் கடலுக்கு மீன்பிடிக்க செல்ல தடை விதிக்கப்பட்டது. இதனால், ராமநாதபுரம் மாவட்டத்தில் ராமேசுவரம், பாம்பன், மண்டபம் உள்ளிட்ட துறைமுகங்களில் 1,500-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் அந்தந்த துறைமுகங்களில் நிறுத்தப்பட்டது.

இந்த தடைகாலத்தின்போது மீனவர்கள் தங்களது விசைப்படகுகள் சீரமைப்பு மற்றும் பராமரிப்பு பணிகளில் ஈடுபட்டு வந்தனர். மேலும் வலைகள், போட் பலகை உள்ளிட்ட உபகரணங்களும் சீரமைக்கப்பட்டது. இதற்கிடையே 61 நாட்கள் அமலில் இருந்த மீன்பிடி தடைகாலம் இன்று நள்ளிரவுடன் நிறைவடைகிறது.

ராமேசுவரம் மீன்பிடி துறைமுகத்தில் உள்ள 550-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் தங்களது விசைப்படகுகளை 2 லட்சம் முதல் 5 லட்சம் வரை சீரமைத்து கடலுக்கு மீன்பிடிக்க செல்ல ஆயத்தமாகி உள்ளனர். விசைப்படகுகளில் வலைகள், ஐஸ்கட்டிகள், டீசல் கேன்கள் உள்ளிட்ட பொருட்கள் இன்று காலையில் சிறிய பைபர் படகுகள் மூலம் கொண்டு சென்றனர். தடைகாலம் நிறைவடைந்தவுடன் அனைத்து படகுகளும் கடலுக்கு மீன்பிடிக்க செல்லும் என மீனவ சங்கத்தினர் தெரிவித்தனர்.

தடைகாலம் நிறைவடைந்து 61 நாட்களுக்கு பின் மீன்பிடிக்க செல்வதால் அதிகளவில் இறால் மீன், நண்டு, கணவாய் மற்றும் விலை உயர்ந்த மீன்கள் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் மீனவர்கள் கடலுக்கு செல்கிறார்கள். மீன் ஏற்றுமதியாளர்கள் சிண்டிகேட் அமைத்து விலையை குறைத்து எடுப்பதை மாவட்ட நிர்வாகம் கண்காணித்து மீனவர்களுக்கு உரிய விலை கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

தடைகாலம் நிறைவடைந்து மீன்பிடிக்க செல்லும் மீனவர்கள் இந்திய எல்லைக்குள் மட்டுமே மீன்பிடிக்க வேண்டும். ஆர்வம் மிகுதியால் எல்லைதாண்டி இலங்கை கடற்பகுதிக்குள் மீன்பிடிக்க செல்லக்கூடாது. மேலும் தடை செய்யப்பட்ட வலைகளை எக்காரணத்தை கொண்டும் பயன்படுத்தக்கூடாது என மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். 

Tags:    

Similar News