வருமானம் இல்லாமல் ராமேசுவரம் மீனவர்கள் தவிப்பு
- மண்டபம் பகுதிகளிலிருந்து மீனவர்கள் யாரும் கடலுக்கு மீன் பிடிக்க செல்லவில்லை.
- 1,500-க்கும் மேற்பட்ட நாட்டுப்படகுகளும் படகு இறங்கு தளத்தில் நங்கூரமிட்டு நிறுத்தப்பட்டுள்ளன.
மண்டபம்:
ராமநாதபுரம் மாவட்டத்தில் ராமேசுவரம், பாம்பன், மண்டபம் உள்ளிட்ட பகுதிகளில் மீன்பிடி தொழிலே பிரதானமாக உள்ளது. இதனை நம்பி லட்சக்கணக்கானோர் வாழ்வாதாரம் இருக்கிறது.
இந்தநிலையில் வானிலையில் ஏற்பட்டுள்ள மாற்றம் காரணமாக வங்கக்கடலில் காற்றின் வேகம் மணிக்கு 45 முதல் 65 கி.மீ. வேகத்தில் வீசக்கூடும் என ராமேசுவரம் மீன்வளத்துறை தெரிவித்துள்ளது.
அதனால் கடல் பகுதியில் பலத்த காற்று வீசும் என்பதால் மீனவர்கள் கடலுக்கு செல்ல மீன்வளத்துறை இயக்குநர் தடை விதித்தார். இதையடுத்து, பாதுகாப்பு நலன் கருதி, கடந்த 21-ந் தேதி முதல் ராமேசுவரம், பாம்பன், மண்டபம் பகுதிகளிலிருந்து மீனவர்கள் யாரும் கடலுக்கு மீன் பிடிக்க செல்லவில்லை.
இந்த தடை 5-வது நாட்களாக தொடர்வதால் ரூ.8 கோடி வரை மீன் ஏற்றுமதி வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் தடை காரணமாக, ராமேசுவரம், பாம்பன், மண்டபம் உள்ளிட்ட பகுதிகளில் 1,000-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளும், 1,500-க்கும் மேற்பட்ட நாட்டுப்படகுகளும் படகு இறங்கு தளத்தில் நங்கூரமிட்டு நிறுத்தப்பட்டுள்ளன.
மறு உத்தரவு வரும் வரை கடலுக்கு செல்ல விதிக்கப்பட்டுள்ள தடையால் மீன வர்கள் மீன்பிடிக்க செல்ல முடியாமலும், 5 நாட்கள் ஆன நிலையில் வருமானம் இல்லாமலும் தவித்து வருகிறார்கள்.