தமிழ்நாடு (Tamil Nadu)

வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள தயார்- மேயர் பிரியா

Published On 2024-10-04 01:50 GMT   |   Update On 2024-10-04 01:50 GMT
  • மழையால் அதிக பாதிப்பு ஏற்படும் பகுதிகளில் மட்டுமே பணிகள் மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.
  • இந்த ஆண்டு மாநகராட்சி சார்பில் 36 படகுகள் வாங்கப்பட்டுள்ளது.

சென்னை:

சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள சென்னை ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற மழலையர் பள்ளி ஆசிரியர்களுக்கான பயிற்சி வகுப்பை சென்னை மாநகராட்சி மேயர் பிரியா தொடங்கி வைத்தார். பின்னர் அவர் கூறியதாவது:-

இந்த ஆண்டு வடகிழக்கு பருவழை அக்டோபர் மாதம் தொடங்கி நவம்பர் மாதத்தில் முடிவடையும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டு பெய்த வடகிழக்கு பருவமழையில் டிசம்பர் மாதத்தில் கனமழையால் பாதிப்பு ஏற்பட்டது. இந்த ஆண்டு முன்னதாகவே மழைக்கு வாய்ப்பு உள்ளதால், சென்னை மாநகராட்சி பகுதிகளில் புதிதாக தொடங்கப்பட்ட மழைநீர் வடிகால்வாய் பணிகள் நிறுத்தப்பட்டுள்ளது.

மழையால் அதிக பாதிப்பு ஏற்படும் பகுதிகளில் மட்டுமே பணிகள் மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள தேவையான அனைத்து பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. எதற்கும் தயாராகவே இருக்கிறோம். கொசஸ்தலை ஆறு மற்றும் கோவளம் பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது. கொசஸ்தலை ஆறு தூர்வாரும் பணிகள் 80 சதவீதம் முடிவடைந்துள்ளது.

 

இந்த ஆண்டு மாநகராட்சி சார்பில் 36 படகுகள் வாங்கப்பட்டுள்ளது. அதில் தற்போது 6 படகுகள் வந்துள்ளது. அந்த படகுகளை மண்டலங்கள் 3, 12, 14 ஆகிய 3 மண்டலங்களுக்கு தலா 2 படகுகள் வழங்கப்பட்டுள்ளது. எஞ்சிய 30 படகுகள் வந்தபின்பு, கடந்த ஆண்டு அதிகமாக பாதிக்கப்பட்ட மண்டலங்களுக்கு தலா 2 படகுகள் வழங்கப்படும். அனைத்து பணிகளும் தீவிரமாக நடைபெறுகிறது.

மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் 146 முகாம்கள் கண்டறியப்பட்டுள்ளது. மாநகராட்சி பள்ளி மற்றும் அரசு பள்ளி உள்பட பல்வேறு பகுதிகளில் முகாம்கள் அமைக்கப்பட உள்ளது. கடந்த ஆண்டு முகாம் மற்றும் சமையல் கூடங்கள் வெவ்வேறு பகுதியில் அமைக்கப்பட்டதால் பல்வேறு சிரமங்கள் ஏற்பட்டது. எனவே, முகாம் அமைக்கப்பட உள்ள பகுதியிலேயே சமையல் கூடங்களும் அமைக்கப்பட உள்ளது. மாநகராட்சியின் கீழ் உள்ள சில சுரங்கப்பாதைகள் மெட்ரோ ரெயில் பணிகளால் சேதமடைந்துள்ளது. அதை மெட்ரோ ரெயில்வே நிர்வாகம் சீர்செய்து கொடுப்பதாக தெரிவித்துள்ளனர்.

Tags:    

Similar News