தமிழ்நாடு

ரெயிலில் சிக்கியிருந்த கர்ப்பிணி ஹெலிகாப்டர் மூலம் மீட்பு

Published On 2023-12-19 06:53 GMT   |   Update On 2023-12-19 06:53 GMT
  • 300 பயணிகளை மீட்ட நிலையில் மீதி இருந்த 500 பயணிகளை மீட்பதற்குள் நீர்வரத்து அதிகமானது.
  • ரெயிலில் சிக்கியிருப்பவர்களில் அவசர மருத்துவ உதவி தேவைப்படுபவர்களை ஹெலிகாப்டரில் மீட்க முடிவு செய்துள்ளனர்.

தூத்துக்குடி:

ஸ்ரீவைகுண்டத்தில் செந்தூர் எக்ஸ்பிரஸ் ரெயிலில் 3-வது நாளாக தவித்து கொண்டிருக்கும் 500 பயணிகளையும் மீட்பதற்கான முயற்சிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

திருச்செந்தூரில் இருந்து நேற்று முன்தினம் சென்னை நோக்கி புறப்பட்ட செந்தூர் எக்ஸ்பிரஸ் ரெயில் ஸ்ரீவைகுண்டத்தில் மழையில் சிக்கியது.

300 பயணிகளை மீட்ட நிலையில் மீதி இருந்த 500 பயணிகளை மீட்பதற்குள் நீர்வரத்து அதிகமானது. எனவே அவர்களை மீட்க முடியவில்லை.

ஒரு பக்கம் பெருக்கெடுத்து ஓடும் தாமிரபரணி ஆறு. மற்ற மூன்று பக்கமும் அளவுக்கு அதிகமான வெள்ளம் சூழ்ந்துள்ளதால் மீட்பு குழுவினரால் நெருங்க முடியவில்லை. இன்று 3-வது நாளாக ரெயிலிலேயே தவிக்கிறார்கள்.

சூலூர், கொச்சி ஆகிய இடங்களில் இருந்து கடற்படை, விமானப்படையை சேர்ந்த 7 ஹெலிகாப்டர்கள் மீட்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.

ரெயிலில் சிக்கியிருப்பவர்களில் அவசர மருத்துவ உதவி தேவைப்படுபவர்களை ஹெலிகாப்டரில் மீட்க முடிவு செய்துள்ளனர்.

அதன்படி ரெயிலில் இருந்த கர்ப்பிணி பெண் ஒருவரை இன்று ஹெலிகாப்டரில் மீட்டனர். அந்த பெண்ணுக்கு தேவையான மருத்துவ முதலுதவிகள் அளிக்கப்பட்டன. பின்னர் அவர் மதுரை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

வெள்ளத்தில் சிக்கி தவித்த கர்ப்பிணி பெண் உள்பட 55 பெண்கள், 19 சிறுவர்கள், 3 கைக்குழந்தைகளை ராணுவத்தினர் நேற்று மீட்டு பாதுகாப்பான இடத்துக்கு கொண்டு சென்றனர்.

தேசிய பேரிடர் மீட்பு குழுவும், ரெயில்வே உயர் அதிகாரிகளும் ஸ்ரீவைகுண்டம் பகுதிக்கு விரைந்துள்ளனர்.

ரெயில் பெட்டிகளில் இருக்கும் பயணிகளுக்கு இன்று காலையில் உணவு மற்றும் குடிநீர் பாட்டில்கள் வழங்கப்பட்டன.

இன்று மாலைக்குள் அனைவரையும் மீட்பதற்கு முப்படைகளும் ஒருங்கிணைந்து வழிமுறைகளை ஆய்வு செய்து வருகிறார்கள். விரைவாக மீட்பு பணி தொடங்கும் என்று ரெயில்வே உயர் அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags:    

Similar News