ஆற்றுத் திருவிழா: ஆயிரக்கணக்கான பொதுமக்கள் குடும்பத்துடன் சாமி தரிசனம்
- சாமிகள் பெண்ணையாற்றில் புனித தீர்த்தவாரி செய்து ஆற்றங்கரைகளில் வரிசையாக நிறுத்தப்பட்டன.
- ஏராளமானோர் சுருளிகிழங்கு வாங்குவதற்காகவே ஆற்றுத் திருவிழாவிற்கு வருகின்றனர்.
கடலூர்:
பொங்கல் திருவிழா கடந்த 15-ந் தேதி தமிழகம் முழுவதும் கொண்டாடப்பட்டது. இதனை தொடர்ந்து கடலூர் மாவட்டத்தில் மாட்டுப் பொங்கல், காணும் பொங்கல் விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இந்த நிலையில் கடலூர் தென்பெண்ணையாற்றில் ஆற்று திருவிழா இன்று நடந்தது.
இதை முன்னிட்டு அதிகாலையிலேயே கடலூர் வண்டிப்பாளையம், புருகீஸ்பேட்டை, முதுநகர், பச்சாங்குப்பம், பாதிரிக்குப்பம், மஞ்சக்குப்பம், செம்மண்டலம், சாவடி, புதுப்பாளையம், வன்னியர்பாளையம், தேவனாம்பட்டினம், ஆனைக்குப்பம், குண்டு உப்பலவாடி, தாழங்குடா, உச்சிமேடு, நானமேடு உள்ளிட்ட ஏராளமான கிராம பகுதிகளில் இருந்து 100-க்கும் மேற்பட்ட சாமிகள் அலங்கரிக்கப்பட்டு பெண்ணையாற்றிற்கு கொண்டு வரப்பட்டன. சாமிகள் பெண்ணையாற்றில் புனித தீர்த்தவாரி செய்து ஆற்றங்கரைகளில் வரிசையாக நிறுத்தப்பட்டன.
கடலூர் மற்றும் சுற்றியுள்ள கிராமங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான மக்கள் குடும்பத்துடன் ஆற்றுத் திருவிழாவில் கலந்துகொண்டு வழிபட்டனர். இதில் ஒரு சிலர் ஆற்றில் புனித நீராடினர். ஆற்று கரையோரம் கடைகள் வைக்கப்பட்டு இருந்தன. இங்கு பொருட்கள், குழந்தைகளுக்காண விளையாட்டு பொருட்கள், உணவு பொருட்கள், வீட்டு உபயோக பொருட்கள் உள்ளிட்டவைகள் விற்பனை செய்யப்பட்டன. ஏராளமானோர் சுருளிகிழங்கு வாங்குவதற்காகவே ஆற்றுத் திருவிழாவிற்கு வருகின்றனர். இந்த கிழங்கினை ஏராளமானோர் வாங்கிச்சென்றனர். . ஆற்று திருவிழாவில் அசம்பாவிதம் நடைபெறாமல் இருக்க போலீசார் பலத்த பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
இதேபோல் கடலூர் மாவட்டம் பண்ருட்டி அடுத்த கண்டரக்கோட்டை தென்பெண்ணை ஆற்றில் ஆண்டுதோறும் தை மாதம் 5-ம் நாள் ஆற்று திருவிழா வெகு விமர்சையாக நடைபெறுவது வழக்கம். அதேபோல இந்த ஆண்டு ஆற்று திருவிழா இன்று நடந்தது. இதில் கடலூர், விழுப்புரம், புதுவை பகுதிகளில் உள்ள நூற்றுக்கணக்கான கிராமங்களில் இருந்து சாமி சிலைகள் ஊர்வலமாக கொண்டு வரப்பட்டு தீர்த்தவாரி நடந்தது.