தமிழ்நாடு

ஈரோட்டில் இரவில் ஆவணங்கள் இன்றி கொண்டு வரப்பட்ட ரூ.3 லட்சம் பறிமுதல்- கண்காணிப்பு குழுவினர் நடவடிக்கை

Published On 2023-02-12 08:13 GMT   |   Update On 2023-02-12 08:13 GMT
  • 24 மணி நேரமும் சுழற்சி முறையில் ஈரோடு கிழக்கு தொகுதி முழுவதும் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
  • ரூ .50 ஆயிரத்திற்கு மேல் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்படும் பணத்தை பறிமுதல் செய்து வருகின்றனர்.

ஈரோடு:

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வரும் 27-ந் தேதி நடைபெறுகிறது. இதற்கான அறிவிப்பு கடந்த மாதம் 18-ந் தேதி வெளியானது. இதையடுத்து தேர்தல் நடத்தை விதி முறைகள் அமலுக்கு வந்துவிட்டன.

தேர்தலில் பொதுமக்களுக்கு பணம், பரிசுப் பொருட்கள் கொடுப்பதை தடுக்கும் வகையில் 4 நிலை கண்காணிப்பு குழு, 3 பறக்கும் படை அமைக்கப்பட்டு அவர்கள் 24 மணி நேரமும் சுழற்சி முறையில் ஈரோடு கிழக்கு தொகுதி முழுவதும் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதை தொடர்ந்து அவர்கள் ரூ .50 ஆயிரத்திற்கு மேல் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்படும் பணத்தை பறிமுதல் செய்து வருகின்றனர்.

அதன்படி கடந்த மாதம் 20-ந் தேதி முதல் நேற்று வரை உரிய ஆவணங்கள் இன்றி கொண்டுவரப்பட்ட 38 லட்சத்து 53 ஆயிரத்து 370 ரூபாயை பறக்கும் படை மற்றும் நிலை கண்காணிப்பு குழுவினர் பறிமுதல் செய்து ஈரோடு மாநகராட்சி அலுவலகத்தில் உள்ள தேர்தல் கட்டுப்பா ட்டு அறையில் தேர்தல் நடத்தும் அலுவலர் சிவகுமாரிடம் ஒப்படைத்த னர்.

இந்நிலையில் நேற்று இரவு 10.45 மணி அளவில் வீரப்பம்பாளையத்தில் நிலை கண்காணிப்பு குழுவினர் வாகன சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது ஒரு கார் வந்தது. அந்த காரை அதிகாரிகள் மற்றும் போலீசார் நிறுத்தி சோதனை செய்த போது அதில் ரூ.3 லட்சம் பணம் இருந்தது தெரிய வந்தது. இது குறித்து காரில் வந்த நபரிடம் விசாரித்த போது அவர் நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடை சேர்ந்த செல்வ பாரதி (30) என்பது தெரியவந்தது.

அவரிடம் பணத்திற்குரிய ஆவணங்கள் இல்லாததால் நிலை கண்காணிப்பு குழுவினர் ரூ.3 லட்சத்தை பறிமுதல் செய்து தேர்தல் கட்டுப்பாட்டு அறையில் ஒப்படைத்தனர். இதுவரை ஈரோடு கிழக்கு தொகுதியில் மொத்தம் ரூ. 41 லட்சத்து 53 ஆயிரத்து 370 ரூபாய்யை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.

Tags:    

Similar News