டாஸ்மாக் ஊழியரிடம் ரூ.4.48 லட்சம் பறிமுதல்: தேர்தல் பறக்கும் படை நடவடிக்கை
- கண்காணிப்பு குழுவினர் போலீசார் உதவியுடன் வாகன தணிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.
- சோதனையில் உரிய ஆவணம் இன்றி ரூ.50 ஆயிரத்திற்கும் மேல் கொண்டு சென்றால் அவை பறிமுதல் செய்யப்பட்டு வருகிறது.
தஞ்சாவூர்:
தமிழகத்தில் வரும் 19-ந் தேதி நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
இதனை முன்னிட்டு தஞ்சை நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட இடங்களில் வாக்காளர்களுக்கு பணம், பரிசு பொருட்கள் கொண்டு செல்வதை தடுக்க பறக்கும் படை, நிலையான கண்காணிப்பு குழுவினர் போலீசார் உதவியுடன் வாகன தணிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த சோதனையில் உரிய ஆவணம் இன்றி ரூ.50 ஆயிரத்திற்கும் மேல் கொண்டு சென்றால் அவை பறிமுதல் செய்யப்பட்டு வருகிறது.
இந்நிலையில் தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி சாலை மேம்பாலம் அருகே பறக்கும் படை தனி தாசில்தார் கண்ணன் தலைமையில் குழுவினர் போலீசார் உதவியுடன் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது அந்த வழியாக வந்த ஒரு காரை வழிமறித்து நிறுத்தி சோதனை செய்தனர். அதில் ரூ.4 லட்சத்து 48 ஆயிரத்து 480 ரொக்கம் இருந்தது கண்டுபிடி க்கப்பட்டது.
இது குறித்து காரை ஓட்டி வந்தவரிடம் நடத்திய விசாரணையில், அவர் வடுவூர் நெய்வாசல் டாஸ்மாக்கில் பணிபுரிவதும், அங்கு வசூலான பணத்தை தஞ்சை மருத்துவ கல்லூரி சாலையில் உள்ள தனது வீட்டுக்கு கொண்டு வந்து பின்னர் வங்கியில் செலுத்த இருந்ததும் தெரியவந்தது. இருந்தாலும் அதற்கு உரிய ஆவணம் இல்லாததால் ரூ.4 லட்சத்து 48 ஆயிரத்து 480-ஐ அதிகாரிகள் பறிமுதல் செய்து கருவூலத்தில் ஒப்படைத்தனர்.