அமைச்சர் துரைமுருகன் சொந்த கிராமத்தில் ரூ.7.5 லட்சம் பறிமுதல்
- வாக்காளர்களுக்கு பணம் சப்ளை செய்ய பணம் பதுக்கி வைத்திருப்பதாக பறக்கும் படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
- நடராஜன் வீட்டில் பணம் பதுக்கியது யார்? என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
வேலூர்:
வேலூர் மாவட்டம் கே.வி.குப்பம் அருகே உள்ளது காங்குப்பம் கிராமம். இது அமைச்சர் துரைமுருகனின் சொந்த ஊர் ஆகும். இந்த கிராமத்தை சேர்ந்தவர் நடராஜன். விவசாயி.
வட்டிக்கு பணம் கொடுக்கும் தொழிலும் ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது. இவருடைய வீட்டில் வாக்காளர்களுக்கு பணம் சப்ளை செய்ய பணம் பதுக்கி வைத்திருப்பதாக பறக்கும் படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. பறக்கும் படையினர் மற்றும் போலீசார் நேற்று இரவு அவரது வீட்டை சோதனையிட சென்றனர்.
இதனை அறிந்ததும் நடராஜன் மற்றும் அவரது குடும்பத்தினர் வீட்டை உள் பக்கமாக பூட்டி கொண்டனர். மேலும் வீட்டில் உள்ள அனைத்து மின்விளக்குகளையும் அணைத்துவிட்டனர்.
இது பற்றிய தகவலறிந்த கே.வி.குப்பம் தாசில்தார் சந்தோஷ், இன்ஸ்பெக்டர் ஆதர்ஷ் மற்றும் போலீசார் அங்கு வந்து வீட்டின் கதவை பலமுறை கைகளால் தட்டினர். உடனடியாக கதவை திறக்கும்படி கூறினர்.
ஆனாலும் நடராஜன் குடும்பத்தினர் கதவை திறக்கவே இல்லை. இது பற்றிய கே.வி.குப்பம் தாசில்தார் சந்தோஷ் உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தார்.
அதன் பேரில் உதவி தேர்தல் நடத்தும் அதிகாரிகள் மற்றும் குடியாத்தம் டி.எஸ்.பி. ரவிச்சந்திரன் உட்பட 100-க்கும் அதிகமான போலீசார் அங்கு விரைந்து வந்தனர். வீட்டின் மொட்டை மாடி வழியாக சென்று கதவை உடைத்து வீட்டுக்குள் புகுந்தனர்.
மொட்டை மாடியில் கட்டு கட்டாக ரூ.2.5 லட்சம் மதிப்பிலான ரூபாய் நோட்டுகள் சிதறி கிடந்தன அவற்றை பறிமுதல் செய்தனர்.
வீட்டுக்குள் சென்று அதிரடியாக சோதனை நடத்தினர். அங்கு பதுக்கி வைத்திருந்த ரூ.5 லட்சம் பணத்தை பறிமுதல் செய்தனர்.
போலீசாரை கண்டதும் நடராஜன் மற்றும் அவருடைய மனைவி பதட்டமான நிலையில் காணப்பட்டனர். மேலும் எப்படி வீட்டுக்குள் வரலாம் என அதிகாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
ஆனாலும் அதிகாரிகள் அதைக் கண்டு கொள்ளாமல் தொடர்ந்து சோதனையில் ஈடுபட்டனர்.
நடராஜன் வீட்டில் பணம் பதுக்கியது யார்? என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
அமைச்சர் துரைமுருகன் சொந்த கிராமத்தில் பணம் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. *** பணம் பதுக்கிய வீடு.