தமிழ்நாடு (Tamil Nadu)

துவரம் பருப்பு கொள்முதலில் ரூ.100 கோடி ஊழல் - பா.ஜ.க. குற்றச்சாட்டு

Published On 2024-10-17 10:32 GMT   |   Update On 2024-10-17 10:32 GMT
  • தீபாவளிக்கு பொதுமக்களுக்கு பருப்பு கிடைக்காமல் தட்டுபாடு ஏற்பட்டு உள்ளது.
  • ரேசன் கடைகளில் பருப்பு தட்டுப்பாடு காரணமாக மக்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர் என்பதை மறைத்து விட்டார்.

சென்னை:

தமிழக பா.ஜ.க. செய்தி தொடர்பாளர் ஏ.என்.எஸ்.பிரசாத் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தமிழகத்தில் உள்ள நியாய விலை கடைகள் பருப்பு மற்றும் பாமாயில் தட்டுப்பாட்டு நீக்க முதல்வர் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பல ரேசன் கடைகளில் பருப்பு இருப்பு இருப்பதில்லை. தீர்ந்தவுடன் நாளை துவரம் பருப்பு லோடு எப்போது வரும் என்று தெரியாது. வந்தவுடன் வழங்குகின்றோம். நாளைக்கு வாருங்கள் இரண்டு நாள் கழித்து வாருங்கள் என்று மக்கள் அலைகழிக்கப்படுகிறார்கள்.

முதல்வரின் கொளத்தூர் சட்டமன்ற தொகுதியிலும் இதே நிலைதான் என்பதை அமைச்சர் சக்கரபாணி உணர்ந்து கொள்ள வேண்டும். உதாரணத்திற்கு கொளத்தூர் சட்டமன்ற தொகுதியில் உள்ள ரேசன் கடை குறியீடு எண் சிபி 047 துவரம் பருப்பு இருப்பு இல்லை".

தமிழக பாஜக மக்கள் குறைகளை தீர்க்கக்கூடிய நியாயமான எதிர்கட்சியாக செயல்படுகின்ற எண்ணத்தில் தான் இந்த அறிக்கையை வெளியிடுகிறது. எதிர்க்கட்சியாக திமுக நினைக்காமல் மக்களுடைய பிரச்சனைகளை பாஜக சுட்டிக்காட்டும் பொழுது அதனுடைய உண்மை நிலையை அறிந்து கொண்டு மக்களுக்கு ஆதரவாக செயல்பட வேண்டும்.

இதன் அடிப்படையில் பருப்பு கொள்முதலில் நடந்த, தரக்குறைவான பருப்பை கொள்முதல் செய்ததில் நடந்துள்ள 100 கோடி ரூபாய் ஊழல் அல்லது தமிழக அரசுக்கு ஏற்பட்ட நூறு கோடி இழப்பு குறித்து பொறுப்பு உள்ள எதிர்க்கட்சியாக மக்கள் பாதிக்கப்படக்கூடாது என்ற அடிப்படையில் பாஜகவிற்கு கிடைத்த தகவல்களின் அடிப்படையில் பொறுப்பு கொள்முதலில் நடந்துள்ள 100 கோடி ரூபாய் ஊழல் குறித்த ஆதாரங்களை வெளியிடுகின்றேன்.

தீபாவளிக்கு துவரம் பருப்பு, பாமாயில் தடையின்றி கிடைக்கும் அமைச்சர் அர.சக்கரபாணி கடந்த 16-ந்தேதி அன்று தன்னுடைய அறிக்கையில் தெரிவித்தது உண்மை அல்ல.


தமிழகத்தில் உள்ள நியாய விலை கடைகள் பருப்பு மற்றும் பாமாயில் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. உரிய நேரத்தில் பருப்பு லோடுகள் நியாய விலை கடைகளுக்கு சென்றடையாததால் ரேசன் கடைகளில் பருப்பு இருப்பு இருப்பதில்லை. பருப்பு தீர்ந்தவுடன் நாளை லோடு வரும், நாளைக்கு வாருங்கள், இரண்டு நாள் கழித்து வாருங்கள் என்று மக்கள் அலைகழிக்கப்படுகிறார்கள் என்பது தான் உண்மை நிலை.

முதல்வரின் கொளத்தூர் சட்டமன்ற தொகுதியிலும் இதே நிலைதான் என்பதை அமைச்சர் சக்கரபாணி உணர்ந்து கொள்ள வேண்டும்.

அமைச்சர் சக்கரபாணி வெளியிட்ட அறிக்கையில், "அக்டோபர் மாதத் துவரம் பருப்பு ஒதுக்கீடான 20751 மெட்ரிக் டன்னில் கடந்த 15-ந்தேதி வரை 9461 மெட்ரிக் டன் குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்டு விட்டது. 2.04 கோடி பாமாயில் பாக்கெட்கள் ஒதுக்கீட்டில் 97.83 லட்சம் பாக்கெட்கள் விநியோகப்பட்டுவிட்டன. மீதமுள்ளவை விரைவாக விநியோகிக்கப்பட்டு வருகின்றன. ஆதலால் தீபாவளிக்கு எவ்விதத் தட்டுப்பாடுமின்றி துவரம் பருப்பும், பாமாயிலும் வழங்கப்பட்டு வருகின்றன" என்று உண்மை சூழ்நிலையை மறைத்து அறிக்கை வெளியிட்டு விட்டு தன் கடமையை வழக்கம் போல முடித்து விட்டார். ஆனால் தமிழகம் முழுதும் உள்ள ரேசன் கடைகளில் பருப்பு தட்டுப்பாடு காரணமாக மக்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர் என்பதை மறைத்து விட்டார்.

தற்போது முதல் கட்டமாக தீபாவளி துவரம் பருப்பு கொள்முதலில் நடந்துள்ள 100 கோடி ரூபாய் ஊழலின் பின்னணி விவரிக்கப்பட்டுள்ளது.

கடந்த 10.9.2024-ம் தேதி அன்று தமிழ்நாடு நுகர் பொருள் கழகத்திலிருந்து துவரம் பருப்பு மற்றும் பாமாயில் ஆகிய பொருட்களுக்கு டெண்டர் கோரியிருந்தது.

இதில் துவரம் பருப்பிற்கு 16 நிறுவனங்களும் / 8 நிறுவனங்கள் பாமாயிலுக்கும் கலந்து கொண்டது.

இதில் இந்திய வகை துவரம் பருப்பினை கிலோ ஒன்றிற்கு ரூ.133-க்கு அக்ரிகோ என்ற நிறுவனம் 12000 மெட்ரிக் டன் கோரி இருந்தது.

மேலும் இறக்குமதி செய்யும் துவரம் பருப்பிற்கு ரூ.137.89 என்ற விலையில் ரஜினி எக்ஸ்போர்ட் என்ற நிறுவனம் 18000 மெட்ரிக் டன் விலை கோரியிருந்தது.

அடுத்ததாக இறக்குமதி செய்யப்படும் கனடா மஞ்சள் பருப்பு என்ற வகையை கிலோ ஒன்றுக்கு ரூ.138.40 என்று C.P. Foods என்ற நிறுவனம் 12000-க்கு விலை கோரியிருந்தது.

ஆனால் தமிழ்நாடு நுகர் பொருள் வாணிபக் கழக நிர்வாக இயக்குனர் நெகோசியேசன் என்ற போர்வையில் துவரம் பருப்பு விலை குறைவாக கிடைக்க வாய்ப்பு இருந்தும், துவரம் பருப்பை விட விலை ரூ.20 –30 வரை விலை குறைவாக உள்ள கனடா மஞ்சள் பருப்புக்கு ரூ.131 என்ற விலைக்கு அமைச்சர் மற்றும் நிர்வாக இயக்குனர் சேர்ந்து 16.09.2024 அன்று 51000 மெட்ரிக் டன்க்கு 5 நிறுவனங்களுக்கு வழங்கி விட்டார்கள்.

கம்பெனி விபரங்கள் கீழ்வருமாறு:–

1) புட்ஸ் – 47000 மெட்ரிக் டன்

2) இண்டக்ரேட்டட் சர்வீஸ் பாண்ட் – 4700 மெட்ரிக் டன்

3) மும்பை பாட்டா இன்டர் நேஷனல் லிமிடட் – 4700 மெட்ரிக் டன்

4) வாசுமதி டிரடேர்ஸ் – 4700 மெட்ரிக் டன்

5) மூர்த்தி டிரேடர்ஸ் – 3000 மெட்ரிக் டன்

---------------------------

மொத்தம்- 20000 மெடன்

----------------------------

இந்த 20000 மெடன் பருப்பு வகைகளை இந்த மாதம் 16.10.2024-ம் அன்று சப்ளை செய்த முடிக்க வேண்டும் என்பது ஒப்பந்தம் ஆகும். ஆனால் இன்று வரை 4000 மெடன் மட்டுமே சப்ளை செய்து உள்ளார்கள்.

இதனால் தீபாவளிக்கு பொதுமக்களுக்கு பருப்பு கிடைக்காமல் தட்டுபாடு ஏற்பட்டு உள்ளது. மேலும், ஒப்பந்ததாரர்கள் பருப்பு இருப்பு இல்லாமல் இனிமேல் வரும் விலை குறைந்த பொருளை ரூ.131-க்கு சப்ளை செய்து அதிக லாபம் கிடைக்க முயற்சி செய்து வருகிறார்கள். இதற்கு நிர்வாக இயக்குனரும் துறை அமைச்சரும் உடந்தையாக உள்ளார்கள். இதனால் அரசுக்கு குறைந்தது 100 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டு உள்ளது.

இந்த நூறு கோடி ரூபாய் ஊழலில் அமைச்சரின் பங்கு, அதிகாரிகளின் பங்கு மற்றும் இடைத்தரகர்கள் பங்கு குறித்தும் தமிழக முதல்வர் விசாரணை நடத்த வேண்டும். பொது மக்களுக்கு அளிக்கப்படும் துவரம் பருப்பின் தரத்தை ஆய்வு செய்து உறுதி செய்ய வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Tags:    

Similar News