சேலம் மாவட்டத்தில் விதிகளை மீறிய 40 ஆம்னி பஸ்களுக்கு ரூ.85 ஆயிரம் அபராதம்
- சிலர் தனியார் பஸ்களில் சென்னை, பெங்களூரு, கோவை உள்பட பல முக்கிய நகரங்களுக்கு புறப்பட்டனர்.
- தனியார் பஸ்களில் கூடுதல் கட்டணம் வசூலிப்பதாக புகார் எழுந்தது.
சேலம்:
பாராளுமன்ற தேர்தலையொட்டி வெளியூர்களில் தங்கி வேலை பார்த்தவர்கள் கடந்த சில நாட்களாக சொந்த ஊர்களுக்கு வந்தனர். பினனர் தேர்தல் முடிந்ததால் அவர்கள் நேற்று மீண்டும் அவரவர் வசிக்கும் இடங்களுக்கு புறப்பட்டனர். இதையொட்டி பஸ் , ரெயில் நிலையங்களில் கூட்டம் அலை மோதியது. மேலும் சிலர் தனியார் பஸ்களில் சென்னை, பெங்களூரு, கோவை உள்பட பல முக்கிய நகரங்களுக்கு புறப்பட்டனர். அப்போது தனியார் பஸ்களில் கூடுதல் கட்டணம் வசூலிப்பதாக புகார் எழுந்தது.
இதையடுத்து போக்குவரத்து அதிகாரிகள் தீவிரமாக தனியார் வாகனங்களை கண்காணித்தனர். மேலும் சேலம் புதிய பஸ்நிலையம், ஓமலூர், வாழப்பாடி, நத்தக்கரை, சுங்கச்சாவடி ஆகிய இடங்களில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது நிர்ணயித்ததை விட அதிக கட்டணம், கூடுதல் நபர்களை ஏற்றி சென்றது உள்பட பல்வேறு சாலை விதிகளை மீறியதாக கூறி 40 ஆம்னி பஸ்களின் உரிமையாளர்களுக்கு ரூ. 85 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டு வசூலிக்கப்பட்டது.