தமிழ்நாடு

பெண்களுக்கு பாதுகாப்பான சூழல்- சிறப்பு ஆலோசனை கூட்டத்தில் தலைமைச்செயலாளர் அறிவுறுத்தல்

Published On 2024-09-02 16:47 GMT   |   Update On 2024-09-02 16:47 GMT
  • கல்லூரியை சேர்ந்த பெண் பணியாளர் ஒருவர் உடனிருந்து பணிகளை கண்காணிக்க வேண்டும்.
  • கல்வி நிறுவனங்களில் புகார் பெட்டிகளை அமைக்க வேண்டும்.

தமிழ்நாட்டில் பெண்களுக்கு பாதுகாப்பான சூழலை ஏற்படுவத்துவதற்கான சிறப்பு ஆலோசனைக் கூட்டம், தலைமைச்செயலாளர் முருகானந்தம் தலைமையில் காணொலி காட்சி வாயிலாக தலைமைச் செயலகத்தில் இன்று நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தில் அனைத்து மாவட்ட கலெக்டர்கள், காவல் கண்காணிப்பாளர்கள், ஆணையர்கள், பல்கலைக்கழக துணை வேந்தர்கள், கல்லூரிகளின் முதல்வர்கள், கல்வி அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

மேலும் துறைசார்ந்த அதிகாரிகள் அல்லது அவர்களின் பிரதிநிதிகள் மாவட்ட கலெக்டர் அலுவலகத்திலுருந்து காணொலிக் காட்சி மூலமாக கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

இந்நிலையில் கல்வி நிலையங்களில் பெண்களுக்கு பாதுகாப்பான சூழலை ஏற்படுத்துவதற்கான சிறப்பு ஆலோசனைக் கூட்டத்தில் தலைமைச் செயலாளர் முருகானந்தம் சில அறிவுறுத்தல்களை வழங்கினார்.

அப்போது அவர் கூறியதாவது:-

இதன்படி, அனைத்து பள்ளி கல்லூரிகளிலும் Internal Complaints Committee அமைக்கப்படும். 'Internal Complaints Committee' என்று அழைக்கப்படும் உள் புகார் குழுவை அனைத்து பள்ளி, கல்லூரிகளிலும் முறையாக அமைக்க வேண்டும்.

மகளிர் தங்கும் கல்லூரி விடுதிகள் போன்றவற்றில் வெளி ஆட்கள் பணிகளுக்கு உள்ளே வந்தால், அவர்களுடன் கல்லூரியை சேர்ந்த பெண் பணியாளர் ஒருவர் உடனிருந்து பணிகளை கண்காணிக்க வேண்டும்.

அனைத்து கல்லூரிகளிலும் காவலர் ஒருவரை நியமித்து, கல்லூரிகளில் நடக்கும் பாலியல் ரீதியான குற்றச்சாட்டுகளை உடனடியாக காவல்துறையிடம் கொண்டு செல்ல காவலர் ஒருவரை நியமிக்க வேண்டும்.

கல்வி நிறுவனங்களில் புகார் பெட்டிகளை அமைக்க வேண்டும். மாணவ, மாணவிகள் போதை பொருட்களுக்கு அடிமையாகி இருப்பது தெரிய வந்தால் அவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்க வேண்டும்.

பாலியல் துன்புறுத்தல் மற்றும் போதை பொருட்களுக்கு எதிரான நடவடிக்கைகள் குறித்து மாணவ மாணவிகளுக்கு தொடர் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். கல்லூரிகளில் போதை பொருட்கள் நடமாட்டத்தை கண்காணிக்க 'Anti Drug Club'களை ஏற்படுத்த வேண்டும்.

உயர்கல்வி மாணவர் சேர்க்கையில் தேசிய சராசரியை விட தமிழ்நாடு முதல் இடத்தில் இருப்பதை தக்க வைக்கும் வகையில் பாலியல் ரீதியான குற்றச்சாட்டுகள் மற்றும் போதை பொருட்கள் இல்லாத நிலையை கல்வி நிலையங்களில் ஏற்படுத்திட வேண்டும்.

இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

Tags:    

Similar News