தமிழ்நாடு (Tamil Nadu)

சாம்சங் போராட்டம்.. தமிழக அரசே தொழிலாளர்களை போராட விடு- பா. ரஞ்சித்

Published On 2024-10-09 14:46 GMT   |   Update On 2024-10-09 14:46 GMT
  • போராட்டத்தில் ஈடுபட்டு வரும் சாம்சங் தொழிலாளர்களை போலீசார் கைது செய்தனர்.
  • தொழிற்சங்கம் என்பது ஒரு தொழிலாளியின் அடிப்படை உரிமையாகும்.

ஸ்ரீபெரும்புதூர் அருகே உள்ள சுங்குவார் சத்திரத்தில் 'சாம்சங் இந்தியா' நிறுவனம் இயங்கி வருகிறது. இங்கு பிரிட்ஜ், டி.வி., வாஷிங்மெஷின் உள்ளிட்ட வீட்டு உபயோகப் பொருட்கள் தயாரிக்கின்றனர். இங்கு பணிபுரியும் தொழிலாளர்கள் சி.ஐ.டி.யு. தொழிற்சங்கத்தை தொடங்க அனுமதி கேட்டு வருகின்றனர்.

அது மட்டுமின்றி சம்பள உயர்வு. சம்பள ஏற்றத்தாழ்வு களைதல் ஆகியவை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கையை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், போராட்டத்தில் ஈடுபட்டு வரும் தொழிலாளர்களை போலீசார் கைது செய்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதனையடுத்து, தமிழக அரசே தொழிலாளர்களை போராட விடு என்று இயக்குநர் பா.ரஞ்சித் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

அவரது பதிவில், "தொழிற்சங்கம் என்பது ஒரு தொழிலாளியின் அடிப்படை உரிமையாகும். இப்படி தொழிற்சங்கம் வேண்டியும், சிறந்த பணிச்சூழலுக்காகவும் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக வேலைநிறுத்தம் செய்து வரும் சாம்சங் தொழிலாளர்கள் தங்களது சட்டப்பூர்வ உரிமைகளுக்கு உட்பட்டு வேலைநிறுத்தம் செய்து வருகின்றனர்.

தமிழக அரசு இதை மதிக்காமல், தனியார் நிறுவனத்திற்கு சாதகமாக நடந்து கொள்வது மிக மோசமான அணுகுமுறை. தொழிலாளர்கள் அமைதியான முறையில் வேலைநிறுத்தம் செய்து வரும் போராட்டக்களத்தை அரசு அகற்றுவதில் எந்த நியாயமும் இல்லை. தொழிலாளர்களை இவ்வாறு கைது செய்வது அரசியலமைப்பிற்கு முரணானது, மேலும் தொழிலாளர்களை அச்சுறுத்துவதற்கு காவல்துறையை ஒரு கருவியாகப் பயன்படுத்துவது கண்டிக்கப்பட வேண்டியதாகும். தமிழக அரசே! தங்கள் உரிமை கேட்டுப் போராடும் தொழிலாளர்களை போராட விடு" என்று பதிவிட்டுள்ளார்.

Tags:    

Similar News