2-ம் கட்ட சுற்றுப்பயணம்: நெல்லையில் இன்று தொண்டர்களை சந்திக்கிறார் சசிகலா
- கொக்கிரகுளத்தில் உள்ள எம்.ஜி.ஆர். சிலைக்கு சசிகலா மாலை அணிவிக்கிறார்.
- 16-ந்தேதி நாங்குநேரி தொகுதி, 17-ந்தேதி அம்பை தொகுதி, 18-ந்தேதி ராதாபுரம் தொகுதியிலும் சுற்றுப்பயணம் செல்கிறார்.
நெல்லை:
தீவிர அரசியலில் இருந்து ஒதுங்கி இருந்த சசிகலா, சமீப காலமாக மீண்டும் தீவிர அரசியலில் ஈடுபட்டு வருகிறார்.
மாநிலம் முழுவதும் மாவட்டம் வாரியாக சுற்றுப்பயணம் செய்து அ.தி.மு.க. தொண்டர்களை சந்திக்கப்போவதாக அறிவித்த அவர், ஜெயலலிதா வழியில் மக்கள் பயணம் என்னும் பெயரில் கடந்த மாதம் 17-ந்தேதி தென்காசி மாவட்டத்தில் தனது பயணத்தை தொடங்கினார்.
இந்நிலையில் 2-ம் கட்டமாக இன்று முதல் நெல்லை மாவட்டத்தில் சட்டமன்ற தொகுதி வாரியாக சென்று சசிகலா தொண்டர்களை சந்திக்க உள்ளார். இதற்காக நேற்று இரவு நெல்லை வந்த சசிகலாவுக்கு மாவட்ட எல்லையான கங்கைகொண்டானில் வைத்து அவரது ஆதரவாளர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். தொடர்ந்து வண்ணார்பேட்டையில் உள்ள ஒரு ஓட்டலில் அவர் தங்கினார்.
அவர் இன்று மாலை 4 மணி அளவில் நெல்லை சட்டமன்ற தொகுதியில் சுற்றுப்பயணம் செய்கிறார். முதலாவதாக கொக்கிரகுளத்தில் உள்ள எம்.ஜி.ஆர். சிலைக்கு மாலை அணிவிக்கும் சசிகலா அதனை தொடர்ந்து சந்திப்பு அண்ணா சிலை, காமராஜர் சிலைகளுக்கு மாலை அணிவிக்கிறார்.
அதன் பின்னர் டவுன் எஸ்.என்.ஹைரோட்டில் வ.உ.சி. மணிமண்டபத்தில் உள்ள சிலைக்கு மாலை அணிவித்து விட்டு டவுன் காட்சி மண்டபத்தில் தொண்டர்கள் இடையே உரையாற்றுகிறார். பின்னர் சுத்தமல்லி விலக்கு, நடுக்கல்லூர் பகுதிகளில் தொண்டர்களை அவர் சந்திக்கிறார். அங்கிருந்து பழைய பேட்டை வழியாக ராமையன்பட்டி, மானூர், கங்கைகொண்டான், தாழையூத்து, தச்சநல்லூர் கரையிருப்பு பகுதிகளில் தொண்டர்கள் இடையே பேசுகிறார்.
அப்போது கரையிருப்பு பகுதியில் அவரது ஆதரவாளர்கள் உற்சாக வரவேற்பு அளிக்கின்றனர். தொடர்ந்து அவர் இன்று இரவு ஓட்டலில் ஓய்வெடுக்கிறார். நாளை பாளை சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் பயணம் மேற்கொள்கிறார். அப்போது அவர் முருகன்குறிச்சி, நீதிமன்றம், பாளை பஸ் நிலையம், குல வணிகர்புரம், மேலப்பாளையம் சந்தை ரவுண்டானா ஆகிய இடங்களில் நாளை தொண்டர்களை சந்திக்கிறார்.
தொடர்ந்து நாளை மறுநாள்(வியாழக்கிழமை) சுதந்திர தினத்தையொட்டி அவர் எங்கும் செல்லவில்லை. பின்னர் 16-ந்தேதி நாங்குநேரி தொகுதி, 17-ந்தேதி அம்பை தொகுதி, 18-ந்தேதி ராதாபுரம் தொகுதியிலும் சுற்றுப்பயணம் செல்கிறார்.
இதனையொட்டி அவரது ஆதரவாளர்கள் வண்ணார்பேட்டை பகுதியில் அ.தி.மு.க. கொடியை கட்டியிருந்தனர். அதற்கு எதிர்ப்பு தெரிவித்து அ.தி.மு.க. மாநகர் மாவட்ட செயலாளர் தச்சை கணேசராஜா தலைமையில் நிர்வாகிகள் மாநகர போலீஸ் கமிஷனரிடம் புகார் அளித்தனர். அதன் அடிப்படையில் நேற்று இரவோடு, இரவாக அ.தி.மு.க. கொடிகம்பங்கள் அனைத்தும் அந்த பகுதியில் இருந்து அகற்றப்பட்டன.