மதம் மாறினால் ரூ.10 கோடி தருவதாக கூறி ரூ.5 லட்சம் மோசடி
- சைபர் குற்றப்பிரிவு போலீசார் மோசடி செய்தவர்களை கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்க தொழில் நுட்ப ரீதியாக விசாரணை மேற்கொண்டனர்.
- தூத்துக்குடி குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றம் எண். 5-ல் ஆஜர்படுத்தி தூத்துக்குடி பேரூரணி சிறையில் அடைத்தனர்.
தூத்துக்குடி:
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியை சேர்ந்த இளைஞர் ஒருவருக்கு ஐ.எம்.ஓ. என்ற செயலி மூலமாக சொக்கநாதன் என்ற முகவரியில் இருந்து தொடர்பு கொண்டு ஒருவர் பேசினார்.
அவர், மதம் மாறினால் ரூ.10 கோடி தருவதாக கூறி அதற்காக அமெரிக்காவில் வங்கி கணக்கு தொடங்க, வருமானவரி செலுத்த உள்ளிட்ட காரணங்களுக்காக பணம் கேட்டு உள்ளார்.
அதனை நம்பிய இளைஞர் ரூ. 4 லட்சம் 88 ஆயிரத்து 159 பணத்தை 'ஜிபே' மூலம் அனுப்பி உள்ளார்.
பின்னர் தான் மோசடி செய்யப்பட்டதை அறிந்த இளைஞர் இதுகுறித்து தேசிய குற்ற ஆவண காப்பகத்தில் புகார் செய்தார். அந்த புகாரின் அடிப்படையில் தூத்துக்குடி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் உத்தரவின்படி சைபர் குற்றப்பிரிவு போலீஸ் கூடுதல் கண்காணிப்பாளர் உன்னிகிருஷ்ணன் மேற்பார்வையில் சைபர் குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் ஜோஸ்லின் அருள் செல்வி தலைமையிலான சைபர் குற்றப்பிரிவு போலீசார் மோசடி செய்தவர்களை கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்க தொழில் நுட்ப ரீதியாக விசாரணை மேற்கொண்டனர்.
இதில் தஞ்சாவூர் ரெட்டி பாளையம் ரோடு, ஆனந்தம் நகர் பகுதியை சேர்ந்த மீனாட்சி சுந்தரம் மகன் ராஜவேல் (வயது31) என்பவர், பாதிக்கப்பட்ட இளைஞரிடம் பண மோசடியில் ஈடுபட்டது தெரிய வந்தது.
இதனையடுத்து போலீசார் தஞ்சாவூர் சென்று ராஜவேலை போலீசார் கைது செய்தனர். பின்னர் அவரை தூத்துக்குடி அழைத்து வந்து தூத்துக்குடி குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றம் எண். 5-ல் ஆஜர்படுத்தி தூத்துக்குடி பேரூரணி சிறையில் அடைத்தனர்.
மேலும் இதுகுறித்து சைபர் குற்றப்பிரிவு போலீ சார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.