தமிழ்நாடு

பொது மாறுதல் கலந்தாய்விற்கு மே 17-க்குள் விண்ணப்பிக்க பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தல்

Published On 2024-05-14 10:34 GMT   |   Update On 2024-05-14 10:34 GMT
  • பொது மாறுதல் கலந்தாய்வில் பங்கேற்க விருப்பமுள்ள ஆசிரியர்கள் தங்களது EMIS - ID மூலம் இணைய வழியாக விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும்.
  • பொது மாறுதல் கலந்தாய்விற்காக வரும் 17.05.2024-ந் தேதி வரை விண்ணப்பம் செய்த ஆசிரியர்களுக்கு மட்டுமே பொது மாறுதல் கலந்தாய்வில் கலந்துகொள்ள வாய்ப்பளிக்கப்படும்.

சென்னை:

பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

நடப்புக் கல்வியாண்டிற்கான ஆசிரியர் பொது மாறுதல் கலந்தாய்விற்கு 13.05.2024 முதல் 17.05.2024 வரை ஆசிரியர்கள் கல்வி மேலாண்மை தகவல் முறைமை (EMIS) இணையதளத்தின் வழியாக விண்ணப்பிக்கலாம்.

பொது மாறுதல் கலந்தாய்வில் பங்கேற்க விருப்பமுள்ள ஆசிரியர்கள் தங்களது EMIS - ID மூலம் இணைய வழியாக விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும்.

தொடக்கக்கல்வி இயக்ககம் சார்ந்த விண்ணப்பங்கள் வட்டாரக் கல்வி அலுவலர்கள் சரிபார்த்து ஒப்புதல் அளித்து மாவட்டக்கல்வி அலுவலருக்கு இணைய வழியாக சமர்ப்பிக்க வேண்டும்.

பள்ளி கல்வி இயக்ககம் சார்ந்த விண்ணப்பங்கள் உயர்நிலை / மேல்நிலை பள்ளித் தலைமை ஆசிரியர்கள் சரிபார்த்து ஒப்புதல் அளித்து மாவட்ட கல்வி அலுவலருக்கு இணைய வழியாக சமர்ப்பிக்க வேண்டும்.

வட்டாரக்கல்வி அலுவலர்களால் சமர்ப்பிக்கப்பட்ட தொடக்க கல்வி இயக்கக நிர்வாகத்தின் கீழ் செயல்படும் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களின் விவரங்களை ஏற்பளித்து தொடக்கக் கல்வி மாவட்டக் கல்வி அலுவலர்கள் கல்வி மேலாண்மை தகவல் முறைமை (EMIS) இணையதளத்தில் சமர்ப்பிக்க வேண்டும். இடைநிலை மாவட்டக் கல்வி அலுவலர்களில் சமர்ப்பிக்கப்பட்ட பள்ளிக்கல்வி இயக்கக நிர்வாகத்தின் கீழ் செயல்வடும் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் விவரங்களை ஏற்பளித்து முதன்மைக் கல்வி அலுவலர்கள் மேலாண்மை தகவல் முறைமை (EMIS) இணையதளத்தில் சமர்ப்பித்திட வேண்டும்.

ஆசிரியர்களால் ஒவ்வொரு நாளும் சமர்ப்பிக்கப்படும் விண்ணங்கள் நிலுவையின்றி உடனடியாக வட்டாரக்கல்வி அலுவலர் / உயர்நிலை / மேல்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர்கள் / மாவட்டக் கல்வி அலுவலர் மற்றும் முதன்மைக் கல்வி அலுவலர்களால் சரிபார்க்கப்பட்டு ஏற்பளிக்கப்பட வேண்டும். மேற்படி அலுவலர்களால் ஏற்பளிக்கப்பட்ட விண்ணப்பங்கள், ஆசிரியர்களால் பதிவிறக்கம் செய்யப்பட்டு முழுமையான வடிவில் பிரதி எடுத்துக்கொள்ள வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

பொது மாறுதல் கலந்தாய்விற்காக வரும் 17.05.2024-ந் தேதி வரை விண்ணப்பம் செய்த ஆசிரியர்களுக்கு மட்டுமே பொது மாறுதல் கலந்தாய்வில் கலந்துகொள்ள வாய்ப்பளிக்கப்படும். எனவே எவ்வித விடுதலுமின்றி மாறுதல்கோரும் ஆசிரியர்களின் விண்ணப்பங்களை சரிபார்த்து உரிய அலுவலர்களால் நாள்தோறும் நிலுவையில்லாமல் ஏற்பளித்திட வேண்டும் என அறிவுறுத்தப்படுகிறார்கள்.

மேல்நிலைப்பள்ளிகளில் பணிபுரியும் முதுகலை ஆசிரியர்களுக்கு மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர் பதவி உயர்வுக்கான கலந்தாய்வும் மாறுதலுக்கு முன்பாக நடைபெறும். நடைபெறும் தேதி விரைவில் அறிவிக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News