தமிழ்நாடு

பள்ளி மாணவி கூட்டு பலாத்காரம்: அ.தி.மு.க. கவுன்சிலர் உள்பட 5 பேரிடம் ரகசிய இடத்தில் விசாரணை

Published On 2023-03-16 05:49 GMT   |   Update On 2023-03-16 05:49 GMT
  • பரமக்குடி அனைத்து மகளிர் போலீசார் போக்சோ சட்டத்தின்கீழ் வழக்கு பதிவு செய்து அ.தி.மு.க. கவுன்சிலர் உள்பட 5 பேரையும் கைது செய்தனர்.
  • போலீஸ் காவல் முடிந்த பின் 5 பேரும் நாளை மீண்டும் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்படுவார்கள்.

பரமக்குடி:

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி பகுதியைச் சேர்ந்த 15 வயதுடைய 9-ம் வகுப்பு மாணவியை 3-வது வார்டு அ.தி.மு.க. கவுன்சிலர் சிகாமணி (வயது 44), மறத்தமிழர் சேனை அமைப்பின் நிறுவனர் புதுமலர் பிரபாகரன் (42), ஜவுளிக்கடை உரிமையாளர் ராஜா முகமது (34) ஆகியோர் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்ததாக புகார் இருந்தது. இதற்கு அதே பகுதியைச் சேர்ந்த கயல்விழி (45), உமா (34) ஆகிய 2 பேர் உடந்தையாக இருந்துள்ளனர்.

பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இந்த சம்பவம் தொடர்பாக பரமக்குடி அனைத்து மகளிர் போலீசார் போக்சோ சட்டத்தின்கீழ் வழக்கு பதிவு செய்து அ.தி.மு.க. கவுன்சிலர் உள்பட 5 பேரையும் கைது செய்தனர்.

இந்த நிலையில் இந்த வழக்கு விசாரணையை சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றி போலீஸ் டி.ஜி.பி. உத்தரவிட்டார். அதன்படி சிவகங்கை சி.பி.சி.ஐ.டி. இன்ஸ்பெக்டர் கீதா இந்த வழக்கில் விசாரணை அதிகாரியாக நியமிக்கப்பட்டார். வழக்கு தொடர்பாக சி.பி.சி.ஐ.டி. போலீசார் பாதிக்கப்பட்ட மாணவியிடம் விசாரணை நடத்திய நிலையில் சிறையில் உள்ள 5 பேரையும் போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க அனுமதி கேட்டு ராமநாதபுரம் மகளிர் நீதிமன்றத்தில் மனு செய்தனர்.

மனுவை விசாரித்த மாஜிஸ்திரேட் கோபிநாத், 5 பேரையும் நேற்று முதல் நாளை (17-ந் தேதி) வரை 3 நாட்கள் போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க அனுமதி அளித்தார்.

கோர்ட்டு அனுமதி அளித்த உடன் அதன் தீர்ப்பு நகலை பெற்றுக்கொண்ட சி.பி.சி.ஐ.டி. போலீசார் சிகாமணி உள்ளிட்ட 3 பேர் அடைக்கப்பட்ட ராமநாதபுரம் சிறைக்கு சென்று அவர்களை காவல் எடுத்தனர். இதேபோல் பரமக்குடி மகளிர் சிறையில் உள்ள 2 பெண்களும் காவலில் எடுக்கப்பட்டனர்.

5 பேரும் போலீசார் பலத்த பாதுகாப்புடன் அழைத்துச் செல்லப்பட்டனர். அவர்களை ரகசிய இடத்தில் வைத்து மாணவியை கூட்டு பலாத்காரம் செய்தது தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த வழக்கில் சில முக்கிய புள்ளிகளுக்கும் தொடர்பு இருப்பதாக கருதப்படுகிறது. அதன் அடிப்படையிலும் விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

போலீஸ் காவல் முடிந்த பின் 5 பேரும் நாளை மீண்டும் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்படுவார்கள்.

Tags:    

Similar News