தமிழ்நாடு

பள்ளிகளில் சாதிய அடையாளங்கள், வண்ணக்கயிறுகள் இருக்க கூடாது- தமிழ்நாடு அரசுக்கு பரிந்துரை

Published On 2024-06-18 10:40 GMT   |   Update On 2024-06-18 10:40 GMT
  • அரசுப் பள்ளிகளின் பெயர்களில் ஆதிதிராவிடர், கள்ளர் பள்ளிகள் உள்பட எந்த சாதிய அடையாளங்களும் இருக்கக் கூடாது.
  • குறிப்பிட்ட சாதி ஆதிக்கமாக உள்ள பகுதிகளில் அதே சமூகத்தைச் சேர்ந்தவர்களை தலைமை ஆசிரியர்களாக நியமிக்கக் கூடாது.

நாங்குநேரியில் பள்ளி மாணவன் மற்றும் அவன் குடும்பத்தினர், சக மாணவர்களால் மிகக் கொடூரமான முறையில் தாக்கப்பட்ட சம்பவம் தமிழகத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இளைய சமுதாயத்தினரிடையே சாதி, இன உயர்வு பரவியிருப்பது எதிர்காலத் தமிழ்நாட்டின் நலனுக்கு உகந்ததல்ல. இது உடனடியாக சரி செய்யப்பட வேண்டிய ஒரு முக்கியமான பிரச்சனை என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அப்போது தெரிவித்தார்.

மேலும், பள்ளி, கல்லூரி மாணவர்களிடையே சாதி, இனப் பிரிவினைகள் இல்லாத ஒரு சூழ்நிலையை உருவாக்கிட மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து அரசுக்கு ஆலோசனைகளை வழங்கிட ஓய்வு பெற்ற நீதிபதி சந்துரு தலைமையில் ஒரு நபர் குழு அமைத்து உத்தரவிட்டார்.

பள்ளி, கல்லூரி மாணவர்களிடையே சாதி, இன உணர்வுகளால் உருவாகும் வன்முறைகளைத் தவிர்க்கவும், நல்லிணக்கம் ஏற்படுத்திடவும், வழிமுறைகளை வகுத்திடவும் தமிழ்நாடு அரசால் அமைக்கப்பட்ட ஓய்வு பெற்ற நீதிபதி சந்துரு தலைமையிலான ஒரு நபர் குழு தனது அறிக்கையை மாண்புமிகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களிடம் இன்று சமர்ப்பித்தது.

650 பக்கங்கள் கொண்ட விரிவான இந்த அறிக்கையில் பள்ளி, கல்லூரி மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு தீர்க்க வேண்டிய 20 உடனடி பரிந்துரைகளும், நீண்டகாலத்தில் தீர்க்க வேண்டிய மூன்று பரிந்துரைகளையும் இந்த அறிக்கையில் இடம்பெற்றுள்ளன.

முக்கிய பரிந்துரைகள்:

  • அரசுப் பள்ளிகளின் பெயர்களில் ஆதிதிராவிடர், கள்ளர் பள்ளிகள் உள்பட எந்த சாதிய அடையாளங்களும் இருக்கக் கூடாது
  • தனியார் பள்ளிகளில் உள்ள சாதி பெயர்களை நீக்க வேண்டும். சாதி அடையாளங்கள் இருக்கக் கூடாது என்ற உறுதிமொழி பெற்ற பிறகே, புதிய பள்ளி தொடங்க அனுமதி அளிக்க வேண்டும்
  • குறிப்பிட்ட சாதி ஆதிக்கமாக உள்ள பகுதிகளில் அதே சமூகத்தைச் சேர்ந்தவர்களை தலைமை ஆசிரியர்களாக நியமிக்கக் கூடாது
  • ஆசிரியர்களை தேர்வு செய்யும்போது சமூக நீதி சார்ந்த அவர்களின் நிலைப்பாட்டை கண்டறிய வேண்டும்
  • கைகளில் வண்ணக்கயிறுகள், நெற்றித் திலகம் உள்ளிட்டவற்றுக்கு தடை விதிக்க வேண்டும்
  • மாணவர்களின் வருகை பதிவேட்டில் எக்காரணம் கொண்டும் சாதி பெயர் இடம்பெறக் கூடாது. மாணவர்களின் சாதி விவரங்களை ரகசியமாக வைக்க வேண்டும்
Tags:    

Similar News