தமிழ்நாடு

கட்சியை முடக்க பாஜக திட்டம்: என்.ஐ.ஏ. விசாரணைக்கு நேரில் ஆஜராவேன்- சீமான் ஆவேசம்

Published On 2024-02-02 07:53 GMT   |   Update On 2024-02-02 07:53 GMT
  • தமிழகத்தில் பாஜக-வின் அடுத்தடுத்த நகர்வுகளுக்கு நான் தடையாக இருப்பதால் என்.ஐ.ஏ. இந்த சோதனையை நடத்தியுள்ளது.
  • விடுதலைப்புலிகள் அமைப்பு எங்கு இருக்கிறது? அவர்களுக்கு நாங்கள் எப்படி பணம் வசூலிக்க முடியும்?.

தமிழகத்தில் நாம் தமிழர் கட்சி நிர்வாகிகளின் வீடுகளில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் இன்று காலை சோதனை நடத்தினர். இதனைத் தொடர்ந்து அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியதாவது:-

தமிழகத்தில் பாஜக-வின் அடுத்தடுத்த நகர்வுகளுக்கு நான் தடையாக இருப்பதால் என்.ஐ.ஏ. இந்த சோதனையை நடத்தியுள்ளது. தேர்தல் சமயத்தில் என்னையும் கட்சியையும் முடக்க பா.ஜனதா திட்டமிட்டிருக்கிறது.

விடுதலைப்புலிகள் அமைப்பு எங்கு இருக்கிறது? அவர்களுக்கு நாங்கள் எப்படி பணம் வசூலிக்க முடியும்?. என்.ஐ.ஏ. அதிகாரிகள் என்னிடம்தான் விசாரணை செய்திருக்க வேண்டும். பிப்ரவரி 5-ந்தேதி விசாரணைக்கு ஆஜராகும்படி கட்சி நிர்வாகிகளுக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. அப்போது தானும் நேரில் சென்று ஆஜராக இருக்கிறேன்.

இவ்வாறு தெரிவித்துள்ளார்.

நாம் தமிழர் கட்சியினர் விடுதலைப்புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரன் பற்றியும், அந்த இயக்கத்தை பற்றியும் பெருமைப்பட பேசி வருகிறார்கள். விடுதலைப்புலிகள் இயக்கம் இந்தியாவில் தடைசெய்யப்பட்ட இயக்கமாகவே நீடித்து வருகிறது.

இதுபோன்ற சூழலில் இலங்கை போரின்போது தப்பி ஓடிய விடுதலைப்புலிகள் இயக்கத்தை சேர்ந்த பலர் வெளிநாடுகளிலும், வெளியிடங்களிலும் தலைமறைவாகவே இருந்து வருகிறார்கள். இதுபோன்ற நபர்கள் யார்-யாருடன் தொடர்பில் உள்ளார்கள்? அவர்களுக்கு நிதி உதவி செய்பவர்கள் யார்-யார்? என்பது பற்றி என்.ஐ.ஏ. அதிகாரிகள் தீவிரமாக கண்காணித்து வருகிறார்கள்.

இதன் அடிப்படையிலேயே நாம் தமிழர் கட்சி நிர்வாகிகளின் வீடுகளில் என்.ஐ.ஏ. அதிகாரகள் சோதனை நடத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழகத்தில் தடைசெய்யப்பட்ட அமைப்பினருடன் தொடர்புடையவர்களை பிடித்து அவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதற்காக தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் அவ்வப்போது அதிரடி சோதனையில் ஈடுபட்டு வருகிறார்கள். அந்த வகையில்தான் தற்போது நாம் தமிழர் கட்சி நிர்வாகிகளின் வீடுகளில் சோதனை நடத்தியுள்ளனர்.

Tags:    

Similar News