எங்களுக்கு அதிகாரம் வந்தவுடன் மெரினா நினைவிடங்கள் அகற்றப்படும்- சீமான் பேச்சு
- கடல் என்பது மீனவர்களின் வாழ்வாதாரம். அதனை தி.மு.க. அ.தி.மு.க. தங்களது சொத்தாக மாற்றி வருகிறது.
- ஊழலை ஒழிப்பதாக சொன்னவர்கள் கொசுவைக் கூட ஒழிக்க முடியாமல் திணறி வருகின்றனர்.
ஒட்டன்சத்திரம்:
திண்டுக்கல் மாவட்டம் சின்னாளப்பட்டியில் நடந்த நாம் தமிழர் கட்சி பொதுக்கூட்டத்தில் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசியதாவது:-
தமிழகத்தில் உள்ள நிலப்பரப்பில் 33 சதவீதம் காடுகள் இருக்க வேண்டும். ஆனால் தற்போது 13 சதவீதம் மட்டுமே உள்ளது. எங்களுக்கு அதிகாரம் கிடைத்தால் மரம் நடுவதை மக்கள் இயக்கமாக மாற்றி மாணவர்களுக்கு கல்வி, வேலை வாய்ப்பில் முன்னுரிமை வழங்குவோம்.
நீர் ஆதாரங்கள் கழிவுகளால் மாசடைந்து வருகிறது. விதையில் விஷம் தடவுவதால் தாய்ப்பால் நஞ்சாக மாறி வருகிறது. வேளாண்மை என்பது தொழில் அல்ல. அது தமிழர்களின் பண்பாடு அதனை அரசு வேலையாக செயல்படுத்துவோம்.
கடல் என்பது மீனவர்களின் வாழ்வாதாரம். அதனை தி.மு.க. அ.தி.மு.க. தங்களது சொத்தாக மாற்றி வருகிறது. கடற்கரையில் தலைவர்களுக்கு நினைவிடங்கள் அமைப்பதை ஏற்க முடியாது. தற்போது பேனா நினைவு சின்னம் வைப்பதை முதலமைச்சர் மறு பரிசீலனை செய்ய வேண்டும். தவறினால் எங்களிடம் அதிகாரம் வரும்போது அவற்றை அகற்றுவோம் என்றார்.
முன்னதாக ஒட்டன்சத்திரத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் சீமான் பேசியதாவது:-
பூமிக்கு எந்த உயிரினங்களாலும் ஆபத்து இல்லை. மனிதர்களால்தான் பேராபத்து ஏற்பட்டுள்ளது. கண்ணுக்கு தெரியாத கொரோனா என்ற நுண்ணுயிரியிடம் இந்த உலகம் தோற்றுப்போனது. ஊழலை ஒழிப்பதாக சொன்னவர்கள் கொசுவைக் கூட ஒழிக்க முடியாமல் திணறி வருகின்றனர். நாங்கள் ஆட்சிக்கு வந்தால் மரங்களை வெட்டினால் 6 மாதம் சிறை தண்டனை விதிப்போம். மக்களின் தேவைக்காக மட்டுமே மணல் அள்ளப்பட்டு வந்த நிலையில் தற்போது சொந்த தேவைகளுக்காக அள்ளி வருகின்றனர்.
நாங்கள் ஆட்சிக்கு வந்தால் மிக்ஷி, கிரைண்டர் கொடுக்க மாட்டோம். நல்ல குடிநீர், காற்று, தரமான மருத்துவம் அனைவருக்கும் கிடக்கச் செய்து பூமித்தாயை 10 ஆண்டுகளில் பச்சைப் போர்வையால் போற்றுவோம் என்றார்.