பட்ஜெட்டில் தமிழகம் புறக்கணிப்பு- செல்வப்பெருந்தகை நாளை ஆர்ப்பாட்டம்
- பிரதமர் மோடி அனைத்து மக்களுக்கும் பொதுவானவராக இருக்க வேண்டும்.
- கடந்த 2024 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் தமிழ்நாடு வழங்கிய மொத்த ஜி.எஸ்.டி. தொகை ரூபாய் 12,210 கோடி.
சென்னை:
தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
தேசிய ஜனநாயக கூட்டணி அரசு ஆட்சியமைந்து நிர்மலா சீதாராமன் சமர்ப்பித்த முதல் நிதிநிலை அறிக்கையில் பீகார் மாநிலத்திற்கு ரூபாய் 59,000 கோடியும், ஆந்திர பிரதேச மாநிலத்திற்கு சிறப்பு நிதியாக ரூபாய் 15,000 கோடியும் வழங்கப்பட்டு தமிழகம் உள்ளிட்ட இந்தியா கூட்டணி கட்சிகள் ஆளுகிற மாநிலங்கள் புறக்கணிக்கப்பட்டு, வஞ்சிக்கப்பட்டுள்ளன.
கடந்த 2024 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் தமிழ்நாடு வழங்கிய மொத்த ஜி.எஸ்.டி. தொகை ரூபாய் 12,210 கோடி. ஆனால், தமிழகத்திற்கு சல்லிக்காசு கூட பட்ஜெட்டில் நிதி ஒதுக்கப்படவில்லை.
பா.ஜ.க. கட்சியின் சார்பாக பிரதமர் மோடி தேர்வு செய்யப்பட்டிருந்தாலும் பதவியேற்ற பிறகு அனைத்து மக்களுக்கும் பொதுவானவராக அவர் இருக்க வேண்டும். ஆனால், அதற்கு மாறாக தனது ஆட்சியை காப்பாற்றிக் கொள்ள வேண்டுமென்ற நோக்கத்தில் ஒன்றிய அரசின் நிதியை பாரபட்சமாக சில மாநிலங்களுக்கு வழங்கி, தமிழகத்தை வஞ்சிப்பதை கண்டித்து நாளை (சனிக்கிழமை) மாலை 4 மணியளவில் சென்னை அண்ணாசாலையில் அமைந்துள்ள தலைமை தபால் நிலையம் அருகில், தாராபூர் டவர் முன்பாக சென்னை மாவட்ட காங்கிரஸ் கமிட்டிகள் சார்பில், எனது தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.
அதேபோல, தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்ட காங்கிரஸ் கமிட்டிகளும் ஒன்றிய அரசின் தமிழகத்தை வஞ்சிக்கிற போக்கை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.