தமிழ்நாடு

பெருந்துறை, சென்னிமலை பகுதியில் கடைகள் அடைப்பு, விசைத்தறிகள் இயங்காமல் இருந்த காட்சிகள்.

பெருந்துறை, சென்னிமலை பகுதியில் விவசாயிகள் போராட்டத்துக்கு ஆதரவாக கடைகள் அடைப்பு

Published On 2023-06-12 06:47 GMT   |   Update On 2023-06-12 06:47 GMT
  • போராட்டத்தில் 25 விவசாயிகள் கலந்து கொண்டு விடிய, விடிய உண்ணாவிரத பந்தலிலே படுத்து தூங்கினர்.
  • சென்னிமலை பகுதியில் 4 ஆயிரத்துக்கும் அதிகமான விசைத்தறிகளும் இயங்கவில்லை.

பெருந்துறை:

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த பவானிசாகர் அணை மூலம் 10-க்கும் மேற்பட்ட கூட்டு குடிநீர் திட்ட பணிகள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இது தவிர பல்வேறு வாய்க்கால்கள் மூலம் விவசாயத்துக்கும் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.

பவானிசாகர் அணையில் இருந்து கீழ்பவானி வாய்க்கால் மூலம் ஈரோடு, திருப்பூர், கரூர் ஆகிய மாவட்டங்களில் சுமார் 2 லட்சத்து 7 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெற்று வருகிறது.

இந்நிலையில் கீழ்பவானி வாய்க்காலில் கான்கிரீட் தளம் அமைக்க முடிவு செய்யப்பட்டது. இந்த திட்டத்துக்கு ஒருதரப்பு விவசாயிகள் ஆதரவும், மற்றொரு தரப்பு விவசாயிகள் எதிர்ப்பும் தெரிவித்து வருகின்றனர். எதிர்ப்பு தெரிவித்து வரும் விவசாயிகள் இந்த திட்டம் செயல்படுத்தினால் நிலத்தடி நீர்மட்டம் பாதிக்கும் அபாயம் இருப்பதாக கூறினர்.

இதுதொடர்பாக அவர்கள் பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தினர். மேலும் காலவரையற்ற உண்ணாவிரத போராட்டத்தையும் அறிவித்தனர்.

இதையடுத்து கடந்த 6-ந்தேதி இரவு 1 மணி வரை பெருந்துறை தாசில்தார் அலுவலகத்தில் பேச்சுவார்த்தை நடந்தது. மறுநாள் 7-ந்தேதி விவசாயிகளிடம் கலெக்டரும் பேச்சுவார்த்தை நடத்தினார். 2 கட்ட பேச்சுவார்த்தையும் தோல்வி அடைந்ததால் திட்டமிட்டபடி அன்று மாலையே விவசாயிகள் காலவரையற்ற உண்ணாவிரத போராட்டத்தை பெருந்துறை அருகே உள்ள கூரப்பாளையம் என்ற பகுதியில் தொடங்கினர்.

போராட்டத்தில் 25 விவசாயிகள் கலந்து கொண்டு விடிய, விடிய உண்ணாவிரத பந்தலிலே படுத்து தூங்கினர்.

விவசாயிகளின் காலவரையற்ற உண்ணாவிரத போராட்டத்துக்கு அரசியல் கட்சியினர், மாணவர்கள், பொதுமக்கள், வியாபாரிகள் ஆதரவு தெரிவித்தனர். மேலும் அவர்களும் உண்ணாவிரத போராட்டத்தில் கலந்து கொண்டனர்.

விவசாயிகளின் காலவரையற்ற உண்ணாவிரத போராட்டம் இன்று 6-வது நாளாக தொடர்ந்து நடந்து வருகிறது. இதற்கிடையே விவசாயிகளின் போராட்டத்துக்கு ஆதரவாக இன்று தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை சார்பில் கடைகள் அடைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இதேபோல் சென்னிமலை விசைத்தறி உரிமையாளர்களும் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து இன்று விசைத்தறிகள் மூடப்படும் என்று அறிவித்தனர்.

இதையடுத்து சென்னிமலை வட்டாரத்தில் இன்று கடைகள் முழுமையாக அடைக்கப்பட்டு இருந்தது, சென்னிமலை டவுன் மற்றும் வெள்ளோடு, ஈங்கூர் மற்றும் கிராம புறங்களிலும் மளிகை, காய்கறி கடை, பால் கடை, பைக் ஒர்க்ஷாப், உரக்கடை, டீ கடைகள் உள்பட சிறிய பெட்டிகடை முதல், பெரிய டிபாட்மெண்டல் ஸ்டோர் வரை அனைத்தும் அடைக்கப்பட்டிருந்தது.

விவசாயிகள் போராட்டத்திற்கு வியாபாரிகள் முழு ஒத்துழைப்பு கொடுத்து கடைகளை மூடி உள்ளனர். மருத்து கடைகள் மட்டும் செயல்படுகிறது. மேலும், விவசாயிகளுக்கு ஆதரவாக சென்னிமலை பால்பண்ணை உரிமையாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள் நல சங்கம் சார்பாக ஆதரவு தெரிவித்து இன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை பால் கடைகளும் இயங்காது என அறிவித்துள்ளனர்.

இதேபோல் சென்னிமலை பகுதியில் 4 ஆயிரத்துக்கும் அதிகமான விசைத்தறிகளும் இயங்கவில்லை. இதனால் ரோடுகளில் ஆள் நடமாட்டம் குறைந்துள்ளது. மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது, சென்னிமலை வட்டாரத்தில் முழு கடையடைப்பு நடக்கிறது. ஆனால் பிரதம கைத்தறி நெசவாளர்கள் கூட்டுறவு சங்கங்கள் வழக்கம் போல் இயங்கின.

இதேபோல் பெருந்துறை புதிய பஸ் நிலையம், பழைய பஸ் நிலையம், போலீஸ் நிலையம் ரோடு, ஈரோடு, பவானி, கோவை, சென்னிமலை செல்லும் சாலைகளில் உள்ள அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டு இருந்தன.

பெருந்துறை பழைய பஸ் நிலையம் பகுதியில் உள்ள தினசரி மார்க்கெட்டும் அடைக்கப்பட்டு இருந்தன. இதேபோல் சேனிடோரியம், சென்னிவலசு, காஞ்சிக்கோவில், துடுப்பதி, சீனாபுரம், பீரங்கிமேடு, சிப்காட் பகுதி ஆகிய பகுதிகளிலும் கடைகள் முழுமையாக அடைக்கப்பட்டு இருந்தன.

அத்தியாவசிய தேவைகளான பால், மருந்து கடைகள் மட்டும் திறந்து இருந்தது. கடைகள் அடைப்பு காரணமாக சென்னிமலை, பெருந்துறை பகுதியில் மக்கள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது.

இதேபோல் கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள அளுக்குளி ஊராட்சி, கரட்டுப்பாளையம் ஊராட்சி, குருமந்தூர், கோட்டுகுள்ளாம்பாளையம், நம்பியூர் ஆகிய பகுதிகளிலும் கடைகள் அடைக்கப்பட்டு இருந்தன.

Tags:    

Similar News