தமிழ்நாடு

நாகர்கோவிலில் சின்ன வெங்காயம் கிலோ ரூ.100-க்கு விற்பனை

Published On 2023-10-19 05:42 GMT   |   Update On 2023-10-19 05:42 GMT
  • குமரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வெள்ளரிக்காய் விற்பனைக்கு கொண்டு வரப்படும்.
  • தீபாவளி பண்டிகை நெருங்கும்போது காய்கறிகளின் விலை அதிகமாக காணப்படும்.

நாகர்கோவில்:

நாகர்கோவில் அப்டா மார்க்கெட் மற்றும் கனகமூலம் சந்தைக்கு குமரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், நெல்லை, மதுரை, திண்டுக்கல் மாவட்டங்களில் இருந்தும் காய்கறிகள் விற்பனைக்காக கொண்டு வரப்படுகிறது.

பெங்களூருவில் இருந்து தக்காளி விற்பனைக்கு வருகிறது. கடந்த சில நாட்களாக காய்கறிகளின் விலை உயரத் தொடங்கியுள்ளது. குறிப்பாக சின்ன வெங்காயம், பல்லாரியின் விலை நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே வருகிறது. ஏற்கனவே பல்லாரி மற்றும் சின்ன வெங்காயத்தின் விலை கடந்த சில மாதங்களுக்கு முன்பு உச்சத்தை தொட்டிருந்தது.

அதன் பிறகு படிப்படியாக குறைந்தது. ஒரு கிலோ வெங்காயம் ரூ.30-க்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது. தற்போது மீண்டும் வெங்காயத்தின் விலை உயர தொடங்கியுள்ளது. கடந்த சில வாரங்களாக ரூ.50 முதல் ரூ.60 வரை விற்பனை செய்யப்பட்ட வெங்காயத்தின் விலை நேற்று ரூ.80-க்கு விற்பனையானது. இன்று மேலும் ரூ.20 உயர்ந்து ரூ.100-க்கு விற்பனை செய்யப்பட்டது. பல்லாரி ஒரு கிலோ ரூ.25-க்கு விற்பனை ஆகி வந்தது.

கடந்த வாரம் ரூ.30-ஆக உயர்ந்திருந்த நிலையில் நேற்று கிலோ ரூ.38-க்கு விற்பனை செய்யப்பட்டது. இன்று மேலும் ரூ.7 உயர்ந்து கிலோ பல்லாரி ரூ.45-க்கு விற்பனையானது. பீன்ஸ் கடந்த சில நாட்களாகவே கிலோ ரூ.100-க்கு விற்பனையாகி வருகிறது. வெள்ளரிக்காய், சேனைக்கிழங்கு விலையும் அதிகமாக உள்ளது.

குமரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வெள்ளரிக்காய் விற்பனைக்கு கொண்டு வரப்படும். கடந்த சில நாட்களாக பெய்த மழையின் காரணமாக வெள்ளரிக்காய் உற்பத்தி அடியோடு பாதிக்கப்பட்டது. இதனால் வெள்ளரிக்காய்களின் வரத்து குறைய தொடங்கியதால் விலை உயரத் தொடங்கியுள்ளது.

ஒரு கிலோ வெள்ளரிக்காய் ரூ.50-க்கு விற்பனையானது. இதேபோல் சேனை விலையும் புதிய உச்சத்தை தொட்டுள்ளது. ஒரு கிலோ சேனைக்காய் ரூ.75-க்கு விற்பனை செய்யப்பட்டது. தக்காளி விலையை பொறுத்தமட்டில் மிகப்பெரிய அளவில் மாற்றம் இல்லை. கடந்த சில நாட்களாகவே ஒரு கிலோ தக்காளி ரூ.15 முதல் ரூ.20 வரை விற்பனையாகி வருகிறது.

கேரட் ரூ.50, உருளைக்கிழங்கு ரூ.35, முட்டைகோஸ் ரூ.20, தடியங்காய் ரூ.20, மிளகாய் ரூ.50, வழுதலங்காய் ரூ.50, கத்தரிக்காய் ரூ.60, பாகற்காய் ரூ.60-க்கு விற்பனை செய்யப்பட்டது.

இதுகுறித்து வியாபாரி ஒருவர் கூறுகையில், வழக்கமாக தீபாவளி பண்டிகை நெருங்கும்போது காய்கறிகளின் விலை அதிகமாக காணப்படும். குறிப்பாக பல்லாரி, சின்ன வெங்காயத்தின் விலை அதிகரிக்கும். அதேபோல தான் இந்த ஆண்டு தீபாவளி பண்டிகைக்கு இன்னும் 3 வாரங்களே உள்ள நிலையில் காய்கறிகளின் விலை உயரத் தொடங்கியுள்ளது. இன்னும் சின்ன வெங்காயம், பல்லாரியின் விலை உயர வாய்ப்புள்ளது என்றார்.

Tags:    

Similar News