தமிழ்நாடு

கல்லால் தாக்கி முதியவர் கொலை: தந்தையை மகனே அடித்துக்கொன்றது அம்பலம்

Published On 2023-07-07 05:53 GMT   |   Update On 2023-07-07 05:53 GMT
  • கடல்கன்னிக்கு திருமணமாகி ஒரு மகன் உள்ள நிலையில் கேரளா மாநிலம் கொட்டாரக்கரை பகுதியில் ஜவுளி வியாபாரம் செய்து வருகிறார்.
  • தப்பி ஓடிய கடல் கன்னியை பிடிக்க 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது.

நெல்லை:

நெல்லை மாநகரின் முக்கிய பகுதியாக வண்ணார்பேட்டை விளங்கி வருங்கிறது. மதுரை, சங்கரன்கோவில், ராஜபாளையம் மார்க்கமாக வரும் பஸ்கள் வண்ணார்பேட்டை நிறுத்தத்தில் நின்று செல்கிறது.

இந்த பஸ் நிறுத்தம் அருகே முதியவர் ஒருவர் ரத்தக்காயங்களுடன் உயிரிழந்த நிலையில் கிடப்பதாக பாளையங்கோட்டை போலீஸ் நிலையத்திற்கு அங்கிருந்தவர்கள் தகவல் தெரிவித்துள்ளனர்.

இதனை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு போலீசார் சென்று பார்த்தபோது, முதியவரின் பல் மற்றும் முகத்தின் பல்வேறு பகுதிகளில் காயம் இருந்தது கண்டறியப்பட்டது. இதில் சந்தேகம் அடைந்த போலீசார் முதியவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர். பின்னர், பஸ் நிறுத்தத்தின் அருகே உள்ள சி.சி.டி.வி. காட்சிகளையும் ஆய்வு செய்து விசாரணை நடத்தினர்.

அதில் அதிர்ச்சிக்குரிய சம்பவம் ஒன்று இடம்பெற்று இருந்தது. ராஜபாளையம், தச்சநல்லூர் பகுதி வழியாக நெல்லை வண்ணார்பேட்டை நோக்கி வந்த அரசு பஸ் ஒன்றில் இருந்து உயிரிழந்த முதியவரை ஒரு நபர் இறக்கி கழுத்தில் கை வைத்து தரதரவென்று இழுத்து சென்ற காட்சிகளும், அதனைத் தொடர்ந்து 2 வாகனங்களுக்கு பின்னால் நின்றுகொண்டு முதியவரை சரமாரியாக தாக்கி கழுத்தை நெரித்து கொலை செய்யும் காட்சிகளும் பதிவாகி இருந்தது.

இதனை தொடர்ந்து இந்த சம்பவம் கொலை என்பதை உறுதி செய்த போலீசார் பஸ்சில் வந்த நபர் யார்? அந்த நபருக்கும் முதியவருக்கும் என்ன தொடர்பு? எங்கிருந்து இந்த முதியவர் அழைத்து வரப்பட்டார்? என்பது போன்ற பல்வேறு கோணங்களில் விசாரணையை நடத்தினர்.

பல இடங்களில் இருக்கும் சி.சி.டி.வி. காட்சிகளை ஆய்வு செய்து விசாரணை செய்ததில், கொலை செய்யப்பட்ட முதியவர் விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகில் உள்ள தளவாய்புரத்தை அடுத்த மீனாட்சிபுரம் கிராமத்தைச் சேர்ந்த மாரிமுத்து (வயது 74) என்பது தெரியவந்தது. அவரை கல்லால் தாக்கி கொலை செய்த நபர் அவருடைய மகன் கடல்கன்னி என்ற அதிர்ச்சி தகவலும் வெளியாகி உள்ளது.

கடல்கன்னிக்கு திருமணமாகி ஒரு மகன் உள்ள நிலையில் கேரளா மாநிலம் கொட்டாரக்கரை பகுதியில் ஜவுளி வியாபாரம் செய்து வருகிறார்.

உயிரிழந்த மாரி முத்துவிற்கு ரத்தசோகை குறைபாடு இருந்த நிலையில் உடல் நலம் குன்றிய சூழலில் கடந்த சில நாட்களாக ராஜபாளையம் மருத்துவமனையில் அவர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில் மேல் சிகிச்சைக்காக நெல்லைக்கு அழைத்து செல்ல கூறிய நிலையில் நேற்று வீட்டில் இருந்து நெல்லை அழைத்து வரப்பட்டதாக தெரிகிறது.

மேலும் பஸ்சில் இருந்து கீழே தந்தையை இறக்கி அவரை தரதரவென இழுத்துச் சென்று கொலை செய்துவிட்டு அவர் வைத்திருந்த கைப்பையும் பிடுங்கிக் கொண்டு எந்தவித பதட்டமும் இன்றி அவரது மகன் கடல்கன்னி சாலையில் நடந்து செல்லும் காட்சிகள் வெளியாகி உள்ளது.

மக்கள் நடமாட்டம் நிறைந்த பகுதியில் பெற்ற மகனே, தந்தையை கல்லால் அடித்துக் கொலை செய்த காட்சிகள் வெளியாகி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதனிடையே தப்பி ஓடிய கடல் கன்னியை பிடிக்க 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது. அவர் கேரளாவிற்கு தப்பி சென்று இருக்கலாம் என்ற நிலையில் ஒரு தனிப்படை கேரளா விரைந்துள்ளது.

Tags:    

Similar News