தமிழ்நாடு

அரசு பள்ளியில் ஆன்மிக சொற்பொழிவு.. கேள்வி கேட்ட ஆசிரியருக்கு அமைச்சர் அன்பில் மகேஸ் பாராட்டு

Published On 2024-09-06 06:06 GMT   |   Update On 2024-09-06 06:12 GMT
  • மூடநம்பிக்கைகளை விதைக்கும் வகையில் நிகழ்ச்சி நடத்தப்பட்டு இருக்கிறது.
  • இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

சென்னை, அசோக்நகர் அரசினர் மகளிர் மேல்நிலைப்பள்ளியில் மந்திரம் சொன்னால் பிரபஞ்ச சக்தி இறங்கும் என மூடநம்பிக்கைகளை விதைக்கும் வகையில் ஒரு நிகழ்ச்சி நடத்தப்பட்டு இருக்கிறது. இது தொடர்பான வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

மகாவிஷ்ணு என்பவர் அரசு பள்ளிகளில் தன்னம்பிக்கை குறித்த பேச்சு என்ற தலைப்பில், முழுக்க முழுக்க ஆன்மிக சொற்பொழிவை நிகழ்த்தினார். கடந்த காலங்களில் செய்த பாவங்களுக்கு ஏற்ப இந்த ஜென்மம் கடவுளால் படைக்கப்பட்டிருக்கிறது என்று மாணவர்கள் மத்தியில் அவர் பேசினார்.

இது தொடர்பான வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரல் ஆனது. இதைத் தொடர்ந்து ஆன்மிக சொற்பொழிவு நடைபெற்ற அசோக் நகர் அரசினர் மகளிர் மேல்நிலைப்பள்ளிக்கு எதிராக மாணவர் அமைப்பினர் போராட்டம் நடத்தினர்.

இந்த விஷயம் பூதாகாரமாக வெடித்த நிலையில், பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி செய்தியாளர்களை சந்தித்த போது, மூட நம்பிக்கைகள் குறித்து பேசியவரை அதே மேடையில் வைத்து கேள்வி கேட்ட ஆசிரியர் சங்கருக்கு பாராட்டு தெரிவித்தார்.

 


தொடர்ந்து பேசிய அவர், "என்னுடைய கட்டுப்பாட்டில் உள்ள இடத்திற்கு வந்து, என் ஆசிரியர் சங்கரை அவமானப்படுத்தி பேசிய மகாவிஷ்ணுவை சும்மாக விடமாட்டேன். இது தொடர்பாக கடும் நடவடிக்கை எடுக்கப்படும். பிற்போக்கு பேச்சை எதிர்த்து தமிழ் ஆசிரியர் சங்கர் கேள்வி கேட்டது பெருமையாக உள்ளது."

"அசோக் நகர் அரசுப் பள்ளி பல சாதனைகளை முன்னெடுத்த பள்ளி, இங்கு இப்படி ஒரு சம்பவம் நடந்தது வேதனைக்குரியது, கண்டிக்கக்கூடியது. ஒவ்வொரு மாதமும் மாவட்ட கல்வி அதிகாரிகள் கூட்டத்தில் இது குறித்து அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டு வருகிறது."

"பள்ளி நிகழ்ச்சிகளுக்கு அறிவு சார்ந்தவர்களை மட்டுமே அழைத்து வர வேண்டும். பள்ளிக்கு யாரை அழைக்க வேண்டும் என ஆசிரியர்களுக்கு தெரிய வேண்டும். ஆசிரியர்களுக்கு குறைந்தபட்ச புரிதல் வேண்டும். இதை வேண்டுகோளாகவும், எச்சரிக்கையாகவும் சொல்கிறேன்."

"இந்த சம்பவத்தில் நான்கு நாட்களுக்குள் விசாரணை நடத்தி சம்பந்தபட்டவர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். நாங்கள் எடுக்கப்போகும் நடவடிக்கை தமிழ்நாட்டில் இதுபோன்ற நிகழ்வுகள் நடக்காத வகையில் ஒரு மிகப்பெரிய பாடமாக இருக்கும். இந்த விவகாரத்தில் உங்களுக்கு இருக்கும் அதே உணர்வுதான் முதல்-அமைச்சருக்கும், பள்ளிகல்வித்துறைக்கும் உள்ளது," என்று தெரிவித்தார்.

Tags:    

Similar News