தமிழ்நாடு

என் இடத்தில், என் ஆசிரியரை அவமானப்படுத்துவதா? அமைச்சர் அன்பில் மகேஸ் காட்டம்

Published On 2024-09-06 06:27 GMT   |   Update On 2024-09-06 06:27 GMT
  • இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
  • அசோக் நகர் அரசினர் மகளிர் மேல்நிலைப்பள்ளிக்கு எதிராக மாணவர் அமைப்பினர் போராட்டம்.

சென்னை, அசோக்நகர் அரசினர் மகளிர் மேல்நிலைப்பள்ளியில் மந்திரம் சொன்னால் பிரபஞ்ச சக்தி இறங்கும் என மூடநம்பிக்கைகளை விதைக்கும் வகையில் ஒரு நிகழ்ச்சி நடத்தப்பட்டு இருக்கிறது. இது தொடர்பான வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

இந்த விவகாரம் குறித்து பேசிய பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் மூடநம்பிக்கைகள் குறித்த பேசியவரை, அதே மேடையில் வைத்து கேள்வி கேட்ட ஆசிரியருக்கு பாராட்டு தெரிவித்தார். தொடர்ந்து இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுப்பதாகவும் கூறினார்.

தொடர்ந்து பேசிய அவர், "என்னுடைய கட்டுப்பாட்டில் உள்ள இடத்திற்கு வந்து, என் ஆசிரியர் சங்கரை அவமானப்படுத்தி பேசிய மகாவிஷ்ணுவை சும்மாக விடமாட்டேன். தினமும் நூற்றுக்கணக்கான விசிட்டர்கள் என்னை பார்க்கின்றனர். அவர்கள் புகைப்படம் எடுத்துக்கொள்கின்றனர். அதற்காக நான் அவர்களுக்கு அனுமதி அளித்துள்ளேன் என்பது தவறான செய்தி."

"எவ்விதத்திலும் கொள்கையில் சமரசம் இல்லை. புதிய கல்விக் கொள்கையை கூட நாங்கள் இதற்காக ஏற்கவில்லை. தன்னம்பிக்கை பேச்சாளரை மாணவர்களிடம் பேச வைக்கும் ஆசிரியர்களின் முயற்சியில் தவறு இல்லை. ஆனால், அவர்களின் பின்னணியை சோதிக்காமல், என்ன மாதிரி பேசப்போகிறார் என்பதை தெரிந்தே அழைத்து வந்திருக்க வேண்டும்."

"தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து பள்ளிகளிலும் இனி இதுபோன்ற நிகழ்வுகள் நடக்காத வகையில் நடவடிக்கை எடுக்கப்படும். தவறு செய்தவர்கள் தப்பிக்க முடியாது. நல்ல மதிப்பெண் பெறுவது புத்திசாலித்தனம் இல்லை, பகுத்தறிந்து செயல்படுவதே புத்திசாலித்தனம். பிற்போக்கு சிந்தனை உடைய கருத்துக்களை யாராவது கூறினால் அதை எதிர்த்துக் கேள்வி கேட்க வேண்டும். பகுத்தறிவை விதைக்கும் இடம் பள்ளி," என்று கூறினார்.

Tags:    

Similar News