தமிழ்நாடு (Tamil Nadu)

ராமேசுவரம் மீனவர்கள் 9 பேரை சிறைபிடித்த இலங்கை கடற்படை

Published On 2024-07-23 05:38 GMT   |   Update On 2024-07-23 05:38 GMT
  • இலங்கை கடற்படைக்கு சொந்தமான 2 குட்டி ரோந்து கப்பல்கள் அதிவேகமாக மீனவர்களின் படகுகளை நோக்கி வந்தது.
  • ஒரு மீனவர் குறித்து எந்தவொரு விபரமும் தெரியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ராமேசுவரம்:

பாக் ஜலசந்தி, மன்னார் குளைகுடா பகுதியில் பலத்த சூறைக்காற்று வீசி வருவதால் மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்று கடந்த 15-ந்தேதி இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்தது. இதையடுத்து மீனவர்கள் படகுகளை கரையோரம் நிறுத்தி வைத்திருந்தனர்.

இதற்கிடையே கடலில் காற்றின் வேகம் குறைந்ததையடுத்து மண்டபம் பகுதி மீனவர்கள் நேற்று முன்தினமும், நேற்று காலை ராமேசுவரம் மீனவர்களும் கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர். அதன்படி ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரத்தில் இருந்து நேற்று காலை 497 விசைப்படகுகளில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை அனுமதி பெற்று கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர்.

இன்று அதிகாலையில் பெரும்பாலான படகுகள் இந்திய கடல் எல்லையை ஒட்டிய கச்சத்தீவு-நெடுந்தீவுக்கு இடையே வலைகளை விரித்து மீன்பிடித்து கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த இலங்கை கடற்படைக்கு சொந்தமான 2 குட்டி ரோந்து கப்பல்கள் அதிவேகமாக மீனவர்களின் படகுகளை நோக்கி வந்தது.

இதைப்பார்த்து அச்சமடைந்த மீனவர்கள் கடலில் விரித்திருந்த வலைகளை சுருட்டிக் கொண்டு அங்கிருந்து புறப்பட தயாரானார்கள். ஆனாலும் ஒரு சில படகுகளில் இருந்த மீனவர்கள் மீது அவர்களின் படகுக்குள் தாவிக்குதித்த இலங்கை கடற்படையினர் சரமாரியாக தாக்குதல் நடத்தி மீன்பிடிக்க விடாமல் விரட்டியடித்தனர்.

இந்த கொடூரதாக்குதலின் உச்சக்கட்டமாக ஈஸ்டர் ஆரோக்கியதாஸ் என்பவரது விசைப்படகு மீது தங்களது பலம் வாய்ந்த ரோந்து கப்பலை வைத்து மோதி படகை உடைத்து சேதப்படுத்தினர். இதில் படகில் இருந்த 5 மீனவர்கள் அதிர்ஷ்டவசமாக அவர்களின் பிடியில் இருந்து உயிர் தப்பி கரைக்கு வந்து சேர்ந்தனர்.

மேலும் ஈசாக் ராபீன், செல்வக்குமார் ஆகியோருக்கு சொந்தமான இரண்டு விசைப்படகுகளை சுற்றி வளைத்த கடற்படையினர் அதில் இருந்த சகாய ராபர்ட் (வயது 49), ராதா (44), முத்துராமலிங்கம் (51), யாக்கோப்பு (24), ஹரி கிருஷ்ணன் (50), இவரது மகன்கள் பொன்ராமதாஸ் (26), ராம்குமார் (24), லிபின்ராஜ் உள்ளிட்ட 9 மீனவர்களை கைது செய்து காங்கேசம் துறைமுகத்திற்கு அழைத்து சென்றனர்.

இரண்டு படகுகள் மற்றும் அதில் பிடித்து வைத்திருந்து மீன்களை பறிமுதல் செய்தனர். மேலும் 9 மீனவர்கள் மீது எல்லை தாண்டி மீன்பிடித்ததாக வழக்கு பதிவு செய்யும் பணியில் இலங்கையில் அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர். மீன்பிடிக்க சென்ற 9 மீனவர்களில் 8 மீனவர்கள் குறித்த விபரம் மட்டுமே உள்ளது. ஒரு மீனவர் குறித்து எந்தவொரு விபரமும் தெரியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், மீனவ சங்கத்தலைவர் சாகயம் கூறியதாவது:-

ராமேசுவரத்தில் மீன்பிடி தடைகாலம் நிலைவடைந்து மீன்பிடிக்க சென்ற நிலையில் ராமேசுவரம் மீனவர்கள் 22 பேருடன் மூன்று படகுகள் பறிமுதல், இதன் பின்னர் பாம்பன், நம்பு தாளை மீனவர்கள் 25 பேருடன் நான்கு நாட்டுப்படகு பறிமுதல் செய்யப்பட்டது. இந்தநிலையில் இன்று 9 மீனவர்களுடன் இரண்டு படகுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

இலங்கை கடற்படையினர் இந்த செயலுக்கு கடும் கண்டனம் தெரிவிப்பதுடன் மீனவர்கள் மற்றும் படகுகளை விடுவிக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கிறேன் என்றார். படகுகளையும், மீனவர்களையும் மீட்கவில்லையென்றால் ராமேசுவரத்தில் மீன்பிடி தொழில் முடங்கி விடும் எனவும் அவர் ஆதங்கம் தெரிவித்தார்.

Tags:    

Similar News