பட்டத்தரசியம்மன் கோவில் முன்பு படம் எடுத்து ஆடிய நாகப்பாம்பு
- கோவிலுக்கு எதிரே உள்ள மழைநீர் வடிகால் கான்கிரீட் மீது 5 அடி நீளம் கொண்ட நாகப்பாம்பு வந்தது.
- பாம்பிற்கு மஞ்சள், குங்குமம் தூவி, பால் ஊற்றி முட்டையும் வைத்தனர். மேலும் கற்பூரம் ஏற்றி பெண்கள் வழிபட்டனர்.
வடவள்ளி:
கோவை தொண்டாமுத்தூர் அடுத்துள்ளது தென்னமநல்லூர்.
இந்த பகுதியில் உள்ள காந்தி காலனியில் பட்டத்தரசியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவில் 50 ஆண்டுகள் பழமை வாய்ந்த கோவில் ஆகும். இந்த கோவிலுக்கு தினமும் சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த மக்கள் சாமி தரிசனம் செய்ய வருவார்கள்.
நேற்று செவ்வாய்க்கிழமை என்பதால், காலை முதலே மக்கள் கோவிலுக்கு வந்த வண்ணம் இருந்தன. அவர்கள் கோவிலில் சாமி தரிசனம் செய்தனர்.
அப்போது கோவிலுக்கு எதிரே உள்ள மழைநீர் வடிகால் கான்கிரீட் மீது 5 அடி நீளம் கொண்ட நாகப்பாம்பு வந்தது.
அந்த பாம்பு வெகு நேரமாக அங்கிருந்து செல்லாமல் அங்கேயே படம் எடுத்து ஆடியது. அந்த இடத்தை விட்டு நகராமல் வெகுநேரமாக அங்கேயே நின்றிருந்தது.
இந்த நிலையில் கோவிலின் எதிரே நாகப்பாம்பு படம் எடுத்து நிற்கும் தகவல் அந்த பகுதியில் வேகமாக பரவியது. இதையடுத்து அப்பகுதி பெண்கள் அங்கு கூடினர்.
பாம்பிற்கு மஞ்சள், குங்குமம் தூவி, பால் ஊற்றி முட்டையும் வைத்தனர். மேலும் கற்பூரம் ஏற்றி பெண்கள் வழிபட்டனர்.
இதற்கிடையே ஒருவர் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தார். பகல் 12 மணிக்கு சம்பவ இடத்திற்கு வந்த போளுவாம்பட்டி வனசரக ஊழியர்கள், நாகப்பாம்பை பத்திரமாக மீட்டு, முள்ளங்காடு வனப்பகுதியில் விடுவித்தனர். கோவில் முன்பு நாகப்பாம்பு சுமார் 7 மணி நேரமாக ஒரே இடத்தில் படமெடுத்து நின்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
தொண்டாமுத்தூர் பகுதியில் கோவில் முன்பு படமெடுத்து ஆடிய நாகப்பாம்புக்கு பொதுமக்கள் பால் ஊற்றி வழிபட்டனர்.