குட்டிச்சாத்தான்கள் நடமாடுவதாக நினைத்து அச்சத்தில் உறைந்த கிராம மக்கள்
- கிராமத்தில் ஏராளமான மக்கள் குடியிருந்து வருகின்றனர்.
- இரவு நேரங்களில் அப்பகுதி மக்கள் வீடுகளில் இருக்க முடியாத நிலையும் ஏற்பட்டுள்ளது.
முண்டாசுப்பட்டி என்ற திரைப்படத்தில் கதாநாயகனும், அவரது நண்பரும், புகைப்படம்எடுப்பதற்காக ஒரு கிராமத்திற்கு செல்வார்கள். அப்போது அந்த கிராமத்தில் உள்ள அனைத்து வீடுகளின் கதவுகளிலும் திரும்பி போ என்ற வார்த்தைகள் இடம் பெற்றிருக்கும்.
இதனை பார்க்கும் கதாநாயகனின் நண்பர், அங்குள்ள ஊர் பெரியவரிடம், பெரியவரே ஏன் வீட்டின் கதவுகளில் திரும்பி போ என்று எழுதி வைத்துள்ளீர்கள் என கேட்பார்.
அதற்கு, எங்கள் ஊரில் இரவு நேரங்களில் ரத்தக்காட்டேரி ஒன்று சுற்றி வருவதாகவும், அது வீட்டின் கதவை வந்து தட்டுவதாகவும், அப்படி அது தட்டாமல் இருப்பதற்காக இதனை எழுதி இருப்பதாகவும், அதனை பார்க்கும் அவை திரும்பி போய்விடும் எனவும் ஊர் பெரியவர் தெரிவிப்பது போன்ற காட்சிகள் இடம் பெற்றிருக்கும்.
இந்த காட்சியை நாம் அனைவரும் பார்த்து ரசித்து வாய் விட்டு சிரித்து மகிழ்ந்திருப்போம். ஆனால் இதுபோன்று ஒரு சம்பவம் உண்மையிலேயே ஒரு கிராமத்தில் நடக்கிறது என்றால் உங்களால் நம்ப முடிகிறதா? ஆம் தங்கள் கிராமத்தில் இரவு நேரங்களில் குட்டிச்சாத்தான்கள் சுற்றி திரிவதாக தெரிவிக்கின்றனர் அங்கு வசித்து வரக்கூடிய மக்கள்.
திருப்பூர் மாவட்டத்தில் உள்ள ஒட்டப்பாளையம் காலனி தான் குட்டிச்சாத்தான்கள் நடமாடுவதாகவும், கற்கள் வீசப்படுவதாகவும் கூறப்படும் மர்ம கிராமம். இந்த கிராமத்தில் ஏராளமான மக்கள் குடியிருந்து வருகின்றனர். இவர்கள் கூலித்தொழில், விவசாயம் உள்ளிட்ட பணிகளில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்த கிராமத்தில் கடந்த 10 நாட்களுக்கும் மேலாக இரவு நேரங்களில் தானாகவே வீடுகளின் மீது மழை பெய்வது போன்று கற்கள் பொழிந்து கொண்டே இருக்கின்றனவாம்.
இரவு 7 மணி முதல் நள்ளிரவு 1 மணி வரை தொடர்ந்து கற்கள் விழுந்து கொண்டே இருப்பதாக தெரிவிக்கின்றனர் அப்பகுதி மக்கள். அத்துடன் இது குட்டிச்சாத்தான்களின் வேலை தான் என்றும் அடித்து கூறுகிறார்கள்.
தங்கள் கிராமத்தில் குட்டிசாத்தான்கள் நடமாட்டம் இருப்பதாகவும், இரவு நேரங்களில் ஊருக்குள் சுற்றி திரியும் அவை தான், வீடுகளின் மீது கற்களை எறிவதாகவும் நம்பும் மக்கள், அதற்கான ஆதாரமாக கற்களையும் சேமித்து வைத்துள்ளனர்.
வீட்டின் கூரை மீது, மக்கள் இளைப்பாற அமரக்கூடிய மரத்தின் மீது இருந்தும், தெருவில் நடந்து செல்லும் போதும் தானாகவே கற்கள் வந்து விழுகின்றனவாம்.
இரவு நேரங்களில் அப்பகுதி மக்கள் வீடுகளில் இருக்க முடியாத நிலையும் ஏற்பட்டுள்ளது.
வீடுகளில் இருந்தால் தொடர்ந்து கற்கள் விழுந்து கொண்டே இருக்கிறது. இதனால் குழந்தைகள் மிகவும் அச்சத்தில் உறைந்து போய் உள்ளனர். பகல் நேரங்களிலேயே வெளியில் தனியாக செல்வதற்கு குழந்தைகள் அச்சப்படுகிறார்கள்.
இதன் காரணமாக அப்பகுதியை சேர்ந்த மக்கள் அனைவரும், பகலில் தங்கள் வீடுகளிலும், இரவு நேரத்தில் தங்கள் ஊரில் உள்ள கருப்பராயன் கோவிலிலும் தங்குகின்றனர். மாலை 6 மணியானதும் ஊர் மக்கள் அனைவரும் ஒன்று திரண்டு, கருப்பராயன் கோவிலுக்கு வந்து விடுகின்றனர்.
அங்கு வைத்து அனைவரும் சேர்ந்து உணவு சமைத்து சாப்பிட்டு, அங்கேயே தங்கள் நேரத்தை கழிக்கின்றனர். அப்போதும், இன்று என்ன நடக்க இருக்கிறதோ, குட்டி சாத்தான் நம் வீட்டை என்ன பாடு படுத்துகிறதோ என ஒவ்வொரு நாளும் அச்சத்தில் அதனை நினைத்து கவலைப்பட்டு கொண்டிருக்கின்றனர்.
கிராமத்தில் உள்ள குழந்தைகள் அனைவரும் மிகுந்த பயத்தில் உள்ளனர். அவர்களும் இரவில் தூங்க முடியாமல் தவிக்கின்றனர். அவர்களை தூங்க வைப்பதற்காக பெற்றோர்கள் இரவு முழுவதும் கண்விழித்து காத்திருந்து தங்கள் பிள்ளைகளை பாதுகாத்து வருகின்றனர். இப்படி இரவு முழுவதும் கண்விழித்து விட்டு, மறுநாள் காலையில் வேலைக்கு செல்ல முடியாமல் மிகவும் சிரமப்பட்டு வருகிறார்கள் அந்த கிராம மக்கள்.
உண்மையிலேயே இது குட்டிச்சாத்தான் தானா? அல்லது குட்டிச்சாத்தான் வேடத்தில் சுற்றும் குள்ளநரிகளா? என்பதிலும் கிராமத்தினரிடையே ஒருவித குழப்பமாகவே இருக்கிறது. கற்கள் வீசப்படுவதற்கு யார் காரணம் என்பதை அறிய அப்பகுதியை சேர்ந்த இளைஞர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து, இரவு நேரங்களில் ரோந்து பணியிலும் ஈடுபட்டனர். ஆனால் அவர்களிடம் பிடிபட்டது என்னவோ கற்கள் தானே தவிர. வேறு எதுவும் இல்லை. இதன் பின்னரே குட்டிச்சாத்தான் தான் நடமாடுவதாக மக்கள் நம்ப தொடங்கி, குடும்பத்துடன் கோவிலில் தஞ்சம் அடைந்துள்ளனர். தங்கள் நாள் பொழுது முழுவதையும் கோவிலிலேயே கழித்து வருகிறார்கள்.
இதுகுறித்து அப்பகுதியை சேர்ந்த மக்கள் கூறும் போது, எங்கள் கிராமத்தில் கடந்த 10 நாட்களுக்கும் வீடுகளின் மீது கற்கள் விழுந்து வருகின்றன. இது குட்டிச்சாத்தான்களின் வேலை தான். இரவு நேரங்களில் அவை கற்களை தூக்கி வீடுகளின் மீது போட்டு வருகின்றன.கடந்த 4 வருடங்களுக்கு முன்பும் இதுபோன்று ஒரு சம்பவம் நடந்தது. ஒரு வீட்டின் மீது தினமும் கற்கள் விழவே, அவர்கள், தங்கள் நிலம், தோட்டம் உள்ளிட்டவற்றை விட்டு விட்டு இங்கிருந்து காலி செய்து விட்டு வேறு இடத்திற்கு குடியேறிவிட்டனர்.
தற்போது மீண்டும் கிராமத்தில் உள்ள அனைத்து வீடுகள் மீது கற்கள் மழை போல பொழிந்து வருகிறது. இதனால் நாங்கள் அச்சத்தில் உறைந்து போய் உள்ளோம்.
இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
கிராமத்தை சேர்ந்த சிறுவன் ஒருவன், நான் கிராமத்தில் உள்ள ஒரு வீட்டின் அருகே நண்பர்களுடன் அமர்ந்து பேசி கொண்டிருந்தேன். அப்போது திடீரென மேலே இருந்து ஒரு கல் என் காலில் விழுந்தது. சுற்றி பார்த்தால் யாரும் இல்லை. இதனால் எங்களுக்கு பயம் ஏற்பட்டு, அங்கிருந்து ஓடினோம்.
நாங்கள் சென்ற பின்பும், கற்கள் விழுந்து கொண்டே இருந்தன. அதில் சில கற்கள் வீட்டின் கூரைகள் மீது விழுந்து சிக்கி கொண்டன. அப்படி இருக்கும் போது இதனை நம்பாமல் இருக்க முடியுமா என ஒருவித பயத்துடனேயே தெரிவித்தார்.
ஆனால் கிராமத்தில் உள்ள ஒரு சிலர் இது குட்டிச்சாத்தான் இல்லை. குட்டிச்சாத்தான் வேடத்தில் மர்மநபர்கள் தான் இதுபோன்ற செயல்களில் ஈடுபடுகின்றனர். அவர்கள் யார் என்பதை கண்டறிந்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் போலீஸ் நிலையத்திலும் புகார் அளித்துள்ளனர். போலீசாரும் இது தொடர்பாக அந்த கிராமத்திற்கு சென்று தங்கள் விசாரணையை தொடங்கி உள்ளனர்.
குட்டிச்சாத்தான்கள் நடமாடுவதாக ஒரு கிராமமே அச்சத்தில் உறைந்து போய், வீட்டை விட்டு வெளியேறி இரவு நேரங்களில் கோவிலில் தஞ்சம் அடைந்திருப்பது அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.