கடலூர் துறைமுகத்தில் 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்
- கடலூர் மீன் வளத்துறை அதிகாரிகள் மாவட்டத்தில் உள்ள 49 மீனவ கிராமங்களுக்கும் எச்சரிக்கை அறிவிப்பு விடுத்துள்ளனர்.
- ஒருசில பகுதிகளில் அலை அதிகமாக இருந்ததால் மண் அரிப்பு ஏற்பட்டுள்ளது.
கடலூர்:
வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வுநிலை தற்போது புயலாக உருவாகி வருகிறது. எனவே மீனவர்கள் யாரும் கடலுக்கு செல்லக்கூடாது. ஏற்கனவே கடலுக்கு சென்றிருந்தால் மீனவர்கள் அனைவரும் உடனே கரை திரும்ப வேண்டும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதைத்தொடர்ந்து கடலூர் மீன் வளத்துறை அதிகாரிகள் மாவட்டத்தில் உள்ள 49 மீனவ கிராமங்களுக்கும் எச்சரிக்கை அறிவிப்பு விடுத்துள்ளனர். இதன் காரணமாக மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை.
இன்று காலை முதலே கடலில் கடும் சீற்றம் இருந்தது. ராட்சத அலைகள் மேல்எழும்பி கரையை முட்டிமோதி செல்கிறது. இதனால் மீனவர்கள் கரையோரம் நிறுத்தியிருந்த படகுகளை அவசர அவசரமாக பாதுகாப்பான இடங்களுக்கு கொண்டு சென்றனர்.
ஒருசில பகுதிகளில் அலை அதிகமாக இருந்ததால் மண் அரிப்பு ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து கடல் சீற்றம் அதிகரித்தப்படி உள்ளதால் கடலூர் துறைமுகத்தில் இன்று 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. இந்த எச்சரிக்கை தூரத்தில் புயல் மையம் கொண்டுள்ளதை உணர்த்துகிறது.
எனவே மாவட்டத்தில் அனைத்து துறை அதிகாரிகளும் உஷார்படுத்தப்பட்டுள்ளனர்.