வலிமையான பாரதம், வளர்ச்சி அடைந்த பாரதம் கருத்துகேட்பு முகாம்- எல்.முருகன் பார்வையிட்டார்
- பல்வேறு கட்சிகளில் இருந்து விலகி, பா.ஜ.க.வில் இணைந்தவர்களை மத்திய அமைச்சர் எல்.முருகன் பொன்னாடை அணிவித்து வரவேற்றார்.
- இந்த கருத்துக்கள், ஆலோசனைகள் பிரதமரிடம் கொண்டு சேர்க்கப்படும்.
திருச்செங்கோடு:
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் இன்று காலை பா.ஜ.க. சட்டமன்ற தொகுதி தேர்தல் அலுவலகத்தை மத்திய மந்திரி எல். முருகன் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். தொடர்ந்து பல்வேறு கட்சிகளில் இருந்து விலகி, பா.ஜ.க.வில் இணைந்தவர்களை மத்திய அமைச்சர் எல்.முருகன் பொன்னாடை அணிவித்து வரவேற்றார்.
இதனையடுத்து திருச்செங்கோடு பஸ் நிலையம் அருகே உள்ள தினசரி காய்கறி சந்தையில், மாவட்ட பா.ஜ.க. சார்பில் அமைக்கப்பட்ட பிரதமரின் கருத்து கேட்பு முகாமில் பொதுமக்கள் தங்களது கருத்துக்கள், ஆலோசனைகள் ஆகியவற்றை பிரதமருக்கு வழங்கும் வகையில் அதற்கான வைக்கப்பட்ட பெட்டியில் அளித்தனர். இதனை மத்திய மந்திரி எல்.முருகன் பார்வையிட்டார். பின்னர் அவர் கூறியதாவது:-
பிரதமர் நரேந்திர மோடி, வலிமையான பாரதம் வளர்ச்சி அடைந்த பாரதம் குறித்து பொதுமக்கள் தங்கள் கருத்துக்கள் மற்றும் ஆலோசனைகளை வழங்கலாம் என கேட்டுக் கொண்டுள்ளார். அதன டிப்படையில் பா.ஜ.க. சார்பில் கருத்துக் கேட்பு முகாம்கள் நடத்தப்பட்டு அதில் பொது மக்களின் கருத்துக்கள் பெறப்பட்டு வருகின்றன.
எனவே பொதுமக்கள், இளைஞர்கள் பள்ளி கல்லூரி மாணவ, மாணவிகள், தொழிலாளர்கள், அனைத்து தரப்பு மக்கள் இந்த முகாம்களை அதிக அளவில் பயன்படுத்திக் கொண்டு, நமது நாட்டின் நலனுக்கும், வளர்ச்சிக்கும் தகுந்த கருத்துக்களை ஆலோசனைகளை ஒரு வெள்ளைத் தாளில் எழுதி இங்கு வைக்கப்பட்டுள்ள பெட்டிகளில் போடுமாறு கேட்டுக் கொள்கிறேன். மேலும் இந்த கருத்துக்கள், ஆலோசனைகள் பிரதமரிடம் கொண்டு சேர்க்கப்படும். இவ்வாறு அவர் பேசினார்.