நாளை சுபமுகூர்த்தம்- சார்பதிவாளர் அலுவலகத்தில் கூடுதல் டோக்கன் ஒதுக்கீடு செய்ய உத்தரவு
- சார்பதிவாளர் அலுவலகத்தில் கூடுதல் டோக்கன் ஒதுக்கீடு செய்ய செயலாளர் ஜோதி நிர்மலா சாமி உத்தரவிட்டுள்ளார்.
- ஒரு சார்பதிவாளர் உள்ள அலுவலகங்களுக்கு 100க்கு பதிலாக 150 முன்பதிவு வில்லைகள் வழங்கப்படும்.
சுபமுகூர்த்த தினமான நாளை (நவம்பர் 23ம் தேதி) ஆவண பதிவுகள் அதிக அளவில் நடைபெறும் என்பதால் சார்பதிவாளர் அலுவலகத்தில் கூடுதல் டோக்கன் ஒதுக்கீடு செய்ய செயலாளர் ஜோதி நிர்மலா சாமி உத்தரவிட்டுள்ளார்.
இதுகுறித்து பதுவுத்துறை செயலர் கூறியதாவது:-
அதிகளவில் ஆவணப் பதிவுகள் நடைபெறும் சுபமுகூர்த்த தினங்களில் பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று ஆவணப் பதிவுக்காக கூடுதல் முன்பதிவு வில்லைகள் ஒதுக்கீடு செய்யப்படுவது வழக்கம்.
அந்த வகையில் சுபமுகூர்த்த தினமாக கருதப்படும் எதிர்வரும் 23.11.2023 அன்று அதிகளவில் பத்திரப் பதிவுகள் நிகழும் என எதிர்பார்க்கப்படுவதால் அன்றைய தினம் கூடுதலாக முன்பதிவு வில்லைகள் வழங்கப்பட வேண்டும் என பதிவுத்துறைக்கு உத்திரவிடப்பட்டுள்ளது.
அதனடிப்படையில் ஒரு சார்பதிவாளர் உள்ள அலுவலகங்களுக்கு 100க்கு பதிலாக 150 முன்பதிவு வில்லைகளும் இரண்டு சார்பதிவாளர்கள் உள்ள அலுவலகங்களுக்கு 200க்கு பதிலாக 300 முன்பதிவு வில்லைகளும் அதிகளவில் ஆவணப்பதிவுகள் நடைபெறும் 100 அலுவலகங்களுக்கு 100க்கு பதிலாக 150 சாதாரண முன்பதிவு வில்லைகளோடு ஏற்கெனவே வழங்கப்படும் 12 தட்கல் முன்பதிவு வில்லைகளுக்கு கூடுதலாக நான்கு தட்கல் முன்பதிவு வில்லைகளும் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக வழங்கப்படும்.
இவ்வாறு அவர் குறிப்பிட்டிருந்தார்.