அதிக பாரம் ஏற்றி வந்த லாரியில் இருந்து ரோட்டில் விழுந்த கரும்புகள்- போக்குவரத்து பாதிப்பு
- அதிர்ஷ்டவசமாக அந்த சமயத்தில் அங்கு யாரும் இல்லாததால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.
- பகுதி மக்கள் ஒன்று சேர்ந்து ரோட்டில் விழுந்து கிடந்த கரும்புகளை அகற்றினர்.
சத்தியமங்கலம்:
சத்தியமங்கலம் அடுத்துள்ள சுற்று வட்டார பகுதிகளில் 500-க்கும் மேற்பட்ட விவசாய நிலங்களில் கரும்பு பயிரிடப்பட்டுள்ளது. இந்த கரும்பானது சத்தியமங்கலம் அருகே உள்ள தனியார் ஆலைக்கு எடுத்து செல்வது வழக்கம்.
இதேபோல் சம்பவத்தன்று இரவு 10 மணி அளவில் கோபிசெட்டி பாளையம் அருகே உள்ள வெள்ளாள பாளையம் பகுதியில் இருந்து வந்த கரும்பு லாரி அதிக பாரம் ஏற்றி வந்ததால் சத்தியமங்கலம்-அத்தாணி செல்லும் சாலையில் சத்தியமங்கலம் முக்கிய வீதியில் கரும்பு பாரம் திடீரென ரோட்டில் சரிந்தது. அதிர்ஷ்டவசமாக அந்த சமயத்தில் அங்கு யாரும் இல்லாததால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.
ஆனாலும் நடுரோட்டில் கரும்பு சரிந்து விழுந்ததால் சத்தியமங்கலம்-அத்தாணி சாலையில் சுமார் ஒரு மணி நேரமாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. பின்னர் பகுதி மக்கள் ஒன்று சேர்ந்து ரோட்டில் விழுந்து கிடந்த கரும்புகளை அகற்றினர்.
பிறகு சிறிது நேரத்தில் கரும்புகளை முற்றிலு மாக அகற்றி கரும்பு பாரம் ஏற்றி வந்த லாரியை தனியார் ஆலைக்கு அனுப்பி வைத்தனர்.