தமிழ்நாடு

பூண்டி ஏரியில் உள்ள தண்ணீர்

நீர் ஆவியாதலை தடுக்க பூண்டி, சோழவரம் ஏரி தண்ணீர் புழலுக்கு அனுப்பப்படுகிறது

Published On 2024-04-30 10:28 GMT   |   Update On 2024-04-30 10:28 GMT
  • கடந்த சில நாட்களாக கடுமையான கோடை வெப்பம் நிலவி வருவதால் ஏரியில் உள்ள தண்ணீர் வேகமாக ஆவியாகி வருகிறது.
  • செம்பரம்பாக்கம் ஏரியின் மொத்த கொள்ளளவு 3645 மி.கனஅடி. இதில் 2356 மி.கனஅடிதண்ணீர் உள்ளது.

திருவள்ளூர்:

சென்னை மக்களின் குடிநீர் ஆதாரமாக பூண்டி, புழல், செம்பரம்பாக்கம், சோழவரம், கண்ணன் கோட்டை ஏரிகள் உள்ளன. இந்த 5 ஏரிகளிலும் 11 ஆயிரத்து 757 மில்லியன் கனஅடி தண்ணீர் சேமித்து வைக்கலாம். இன்று காலை நிலவரப்படி குடிநீர் ஏரிகளில் மொத்தம் 6 ஆயிரத்து 702 மில்லியன் கனஅடி(6.7டி.எம்.சி) தண்ணீர் இருப்பு உள்ளது.

கடந்த சில நாட்களாக கடுமையான கோடை வெப்பம் நிலவி வருவதால் ஏரியில் உள்ள தண்ணீர் வேகமாக ஆவியாகி வருகிறது. ஏற்கனவே பூண்டி ஏரியில் 898 மில்லியன் கனஅடியும் (மொத்த கொள்ளளவு 3231மி.கனஅடி), சோழவரம் ஏரியில் 108 மில்லியன் கனஅடியும் (மொத்த கொள்ளளவு 1081) தண்ணீர் குறைந்த அளவே உள்ளன. தற்போது நிலவும் கோடை வெயிலின் தாக்கத்தில் நீர் ஆவியாதலை தடுக்கும் வகையில் இந்த 2 ஏரிகளில் உள்ள தண்ணீரையும் புழல் ஏரிக்கு அனுப்பும் பணி நடந்து வருகிறது. இதனால் புழல் ஏரிக்கு நீர் வரத்து 425 கனஅடியாக உள்ளது. வெயில் சுட்டெரித்து வரும் நிலையில் சோழவரம் ஏரி விரைவில் முழுவதும் வறண்டு விடும் நிலையில் உள்ளது.

தற்போது குடிநீர் ஏரிகளில் உள்ள 6.7 டி.எம்.சி. தண்ணீரை வைத்து சென்னையில் இன்னும் 6 மாதத்திற்கு தட்டுப்பாடின்றி குடிநீர் சப்ளை செய்ய முடியும் எனவே வரும் மாதங்களில் சென்னையில் குடிநீர் தட்டுப்பாடு வராது என்று அதிகாரிகள் தெரிவித்து உள்ளது.

மேலும் பூண்டி ஏரியில் நீர் இருப்பு வேகமாக குறைந்து வருவதால் கிருஷ்ணா நதி நீர் ஒப்பந்தப்படி ஆந்திரமாநிலம் கண்டடேறு அணையில் இருந்து தண்ணீரை பெறவும் நீா்வளத்துறை அதிகாரிகள் திட்டமிட்டு வருகிறார்கள்.

புழல் ஏரியின் மொத்த கொள்ளளவு 3300 மி.கனஅடி. இதில் தற்போது 2960 மி.கனஅடி தண்ணீர் உள்ளது. செம்பரம்பாக்கம் ஏரியின் மொத்த கொள்ளளவு 3645 மி.கனஅடி. இதில் 2356 மி.கனஅடிதண்ணீர் உள்ளது. கடந்த ஆண்டு இதே நாளில் சென்னை குடிநீர் ஏரிகளில் மொத்தம் தண்ணீர் இருப்பு 8 டி.எம்.சி ஆக இருந்தது. கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது தற்போது ஒரு டி.எம்.சி தண்ணீர் குறைவாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News