நவராத்திரி விழாவில் பங்கேற்க தமிழக எல்லையை தாண்டி கேரளாவுக்கு சென்ற சாமி விக்ரகங்கள்
- சிலைகளுக்கு வழி நெடுக பக்தர்கள் சிறப்பான வரவேற்பு அளிக்கின்றனர்.
- 10 நாட்கள் பூஜைக்கு பின்னர் சுவாமி விக்ரகங்கள் குமரிக்கு திரும்பி அனுப்பி வைக்கப்படும்.
குழித்துறை:
கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் இந்து அறநிலையத்துறை சார்பில் நடைபெறும் நவராத்திரி விழாவிற்கு, குமரி மாவட்டத்திலிருந்து சுசீந்திரம் முன்னுதித்த நங்கையம்மன், குமார கோவில் முருகன், தேவாரக்கட்டு சரஸ்வதி தேவி ஆகிய சுவாமி விக்ரகங்கள் திருவிதாங்கூர் மன்னர் காலம் தொட்டு சரஸ்வதி தேவியம்மனை யானை மீதும், முன்னுதித்த நங்கை அம்மன், குமாரகோவில் முருகன் ஆகிய விக்ரகங்களை, பல்லக்கிலும், சுமந்தும் கொண்டு செல்லப்படுகிறது.
இந்த சிலைகளுக்கு வழி நெடுக பக்தர்கள் சிறப்பான வரவேற்பு அளிக்கின்றனர். இந்நிலையில் நேற்று பத்மநாபபுரம் அரண்மனையில் உடைவாள் மாற்றும் நிகழ்ச்சியுடன் இந்த சாமி விக்ரகங்கள் வழியனுப்பு விழா நடைபெற்றது. இதில் தமிழக-கேரளா போலீசார் அணிவகுப்பு மரியாதையுடன் யானை மீது சரஸ்வதி தேவியும், பல்லக்குகளில் குமார கோவில் முருகனும், சுசீந்திரம் முன்னுதித்த நங்கையும் ஊர்வலமாக புறப்பட்டது.
வழி நெடுகிலும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வரவேற்பு அளித்தனர். நேற்று இந்த சாமி விக்ரகங்கள் குழித்துறை சாமுண்டேஸ்வரி அம்மன் ஆலயத்தில், தங்குகின்ற நிகழ்ச்சி நடைபெற்றது. இதையடுத்து இன்று காலை 8 மணிக்கு அங்கிருந்து அணிவகுப்பு மரியாதையுடன் புறப்பட்டு சென்றது. அப்போது பக்தர்கள் சிறப்பான வரவேற்பு அளித்தனர்.
இன்று மதியம் 12 மணிக்கு குமரி-கேரளா எல்லை பகுதியான களியக்காவிளையில் உடைவாள் மாற்றும் நிகழ்ச்சி மற்றும் தமிழக இந்து அறநிலைய துறையினர், கேரளா இந்து அறநிலை துறையினரிடம் ஒப்படைக்கும் நிகழ்ச்சி நடந்தது. சாமி விக்ரகங்கள் இன்று நெய்யாற்றின்கரை கிருஷ்ணசாமி கோவிலில் தங்கலும், நாளை திருவனந்தபுரம் சென்றடைகிறது.
அங்கு கிழக்கு கோட்டை கொலுமண்டபத்தில் சரஸ்வதி தேவியையும், ஆர்யா சாலையில் முருகப்பெருமானையும், வலிய சாலையில் முன்னுதித்த நங்கை அம்மனையும், பூஜைக்கு வைத்து 10 நாட்கள் நவராத்திரி விழா நடைபெறுகிறது. இதனை பொதுமக்கள் தரிசனம் மேற்கொள்வார்கள்.
பின்னர் 10 நாட்கள் பூஜைக்கு பின்னர் சுவாமி விக்ரகங்கள் குமரிக்கு திரும்பி அனுப்பி வைக்கப்படும். அப்போதும் பொதுமக்கள் வழி நெடுக வரவேற்பு அளிப்பார்கள். பின்னர் குமரியில் அந்தந்த கோவில்களில் வைத்து வழக்கம்போல் பூஜைகள் நடைபெறும். இந்த சாமி விக்ரகங்கள் செல்லும் வழியில் கேரளா போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
பக்தர்கள் சாலைகளின் இரு புறங்களிலும் மா, பலா, வாழை, தென்னை ஓலை களாலும் அலங்கரித்து பூஜைகள் செய்து வரவேற்பு அளித்தனர்.