தமிழ்நாடு

போட்டி தேர்வுகளில் தமிழ் மொழித்தாள்: தமிழக அரசின் அரசாணையை உறுதி செய்தது உயர்நீதிமன்றம்

Published On 2024-05-30 16:15 GMT   |   Update On 2024-05-30 16:15 GMT
  • தமிழ் மொழித் தகுதித் தேர்வுக்கான பாடத்திட்டம் பத்தாம் வகுப்பு தரத்தில் நிர்ணயம் செய்யப்படுகிறது.
  • கட்டாய தமிழ்மொழித் தாளில் குறைந்தபட்சம் 40 சதவீத மதிப்பெண் தேர்ச்சி கட்டாயமாக்கப்படுகிறது.

தமிழக அரசு பணிகளுக்கான போட்டித்தேர்வுகளில் தமிழ் மொழித்தாள் கட்டாயமாக்கப்படுவதற்கான அரசாணையை 2021 ஆம் ஆண்டு தமிழ்நாடு அரசு வெளியிட்டது.

தமிழக அரசின் அரசாணையில் கூறப்பட்டுள்ளதாவது;

அனைத்து போட்டித் தேர்வுகளிலும் தமிழ் மொழி பாடத்தாள் கட்டாயம். தற்போது நடைமுறையிலுள்ள பொதுத்தமிழ், பொது ஆங்கிலம் உள்ள தேர்வுகளில், பொது ஆங்கிலத்தாள் நீக்கப்பட்டு, பொது தமிழ் தாள் மட்டுமே மதிப்பீட்டுத் தேர்வாக அமைக்கப்படும்.

தமிழ் மொழித் தகுதித் தேர்வுக்கான பாடத்திட்டம் பத்தாம் வகுப்பு தரத்தில் நிர்ணயம் செய்யப்படுகிறது.

கட்டாய தமிழ்மொழித் தாளில் குறைந்தபட்சம் 40 சதவீத மதிப்பெண் தேர்ச்சி கட்டாயமாக்கப்படுகிறது.

தமிழில் தேர்ச்சி பெறாதவர்களின் இதர தேர்வுத்தாள் மதிப்பீடு செய்யப்படமாட்டாது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

தமிழக அரசின் இந்த அரசாணையை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அந்த வழக்கின் விசாரணையில், "விண்ணப்பதாரர்களுக்கான கல்வித் தகுதியை நிர்ணயிக்க அரசுக்கு அதிகாரம் உள்ளது. குரூப் 4 பதவிகளை வகிப்பவர்கள், மக்களுடன் நேரடியாக தொடர்பு கொள்ள தமிழ் மொழியில் புலமை பெற்றிருப்பது அவசியம் என்ற அரசு வாதம் சரியானது தான்.

தமிழ் மொழித் தாள் தேர்வில் 40 சதவீத மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என்று மட்டுமே அரசு கூறுகிறதே தவிர, நூறு சதவீத மதிப்பெண்கள் பெற வேண்டும் என வற்புறுத்தவில்லை. அரசின் கொள்கை முடிவில் தலையிட முடியாது" என்று கூறி தமிழ்நாடு அரசின் அரசாணையை உயர் நீதிமன்றம் உறுதி செய்தது.

Tags:    

Similar News