கள் இறக்க அனுமதி கோரி ஆகஸ்ட் 6-ல் உண்ணாவிரத போராட்டம்- பி.ஆர். பாண்டியன்
- தென்னை விவசாயம் மிகப்பெரிய பாதிப்புக்கு உள்ளாகி உள்ளது.
- கர்நாடகத்திடமிருந்து காவிரி மேலாண்மை ஆணையம் தண்ணீர் பெற்றுத்தர வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
தஞ்சாவூர்:
தஞ்சையில் தமிழ்நாடு காவிரி விவசாயிகள் சங்க பொதுச்செயலாளர் பி.ஆர். பாண்டியன் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
தமிழகத்துக்கு காவிரி நீர் தர மறுக்கும் கர்நாடக அரசுக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடுக்கப்படும் என சென்னையில் நடைபெற்ற அனைத்து கட்சி கூட்டத்தில் தமிழக அரசு எடுத்துள்ள முடிவு வரவேற்கத்தக்கது. மேலும், கர்நாடகத்திடமிருந்து காவிரி மேலாண்மை ஆணையம் தண்ணீர் பெற்றுத்தர வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
எனவே, தமிழக அரசின் நடவடிக்கையை ஏற்று டெல்டா மாவட்டங்களில் வருகிற 26-ந்தேதி நடத்தப்பட இருந்த முழு அடைப்பு, ரெயில் மறியல் போராட்டத்தை ஒத்தி வைப்பது என முடிவு செய்துள்ளோம்.
டெல்டா மாவட்டங்கள் மட்டுமல்லாமல் கோவை மாவட்டத்திலும் தேங்காய் விலை ரூ.4-க்கு சரிந்து விட்டதால், தென்னை விவசாயம் மிகப்பெரிய பாதிப்புக்கு உள்ளாகி உள்ளது. தேங்காய் எண்ணெய், கடலை எண்ணெய், நல்ல எண்ணெய்யை பொது வினியோக திட்டத்தில் விற்க அனுமதித்தால் விவசாயிகள் லாபம் பெற முடியும்.
கேரளம், கர்நாடகம், ஆந்திர மாநிலங்களை போன்று தமிழகத்திலும் கள் இறக்க அனுமதிக்க வேண்டும். இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி அடுத்த மாதம் (ஆகஸ்டு) 6-ந்தேதி சென்னையில் உண்ணாவிரத போராட்டம் நடத்த உள்ளோம்.
இவ்வாறு அவர் கூறினார்.