தமிழ்நாடு

வண்டலூர்-மீஞ்சூர் வெளிவட்ட சாலையில் 4 சுங்கச்சாவடி அமைக்க தமிழக அரசு முடிவு

Published On 2023-01-29 07:34 GMT   |   Update On 2023-01-29 07:44 GMT
  • வண்டலூரில் இருந்து மீஞ்சூர் வரையிலான வெளிவட்ட சாலையில் சுங்க கட்டணம் வசூலிக்க முடிவு செய்துள்ளது.
  • சுங்கச்சாவடி பகுதிகளில் வசிப்பவர்களின் வணிகம் அல்லாத வாகனங்கள் மட்டும் கட்டணமின்றி பயணிக்க அனுமதிக்கப்படும்.

சென்னை:

சென்னை வண்டலூரில் இருந்து மீஞ்சூர் வரை 60.5 கி.மீ. தூரத்துக்கு வெளி வட்டச் சாலை அமைந்துள்ளது.

இந்த சாலையானது சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையை வண்டலூரில் இருந்து நெமிலிச்சேரி வழியாக திருவொற்றியூர், பொன்னேரி, பஞ்செட்டி சாலை, மீஞ்சூர் ஆகியவற்றுடன் இணைக்கிறது.

இந்த நிலையில் இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் வேண்டு கோளுக்கிணங்க தமிழ்நாடு சாலை மேம்பாட்டு நிறுவனம் வண்டலூரில் இருந்து மீஞ்சூர் வரையிலான வெளிவட்ட சாலையில் சுங்க கட்டணம் வசூலிக்க முடிவு செய்துள்ளது. சுங்கக்கட்டணம் வசூலிக்கப்படும் முதல் மாநில நெடுஞ்சாலை இதுவாகும்.

சாலையின் சுங்கக் கட்டணம், செயல்பாடு, நிர்வாகம், பராமரிப்பு ஆகியவை 15 முதல் 20 ஆண்டுகளுக்கு தனியாருக்கு விடப்படுகிறது. இதற்கான ஏலம் விரைவில் விடப்படுகிறது. இதன் மூலம் ரூ.1000 கோடி திரட்ட தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.

இதற்காக வண்டலூர்-மீஞ்சூர் வெளிவட்ட சாலையில் 4 சுங்கச் சாவடிகளை அமைக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது.

வரதராஜபுரம், கொளப்பஞ்சேரி, பழவேடு, சின்ன முல்லைவாயல் ஆகிய 4 இடங்களில் இந்த சுங்கச் சாவடி அமைக்கப்படுகிறது. இந்த 4 சுங்கச் சாவடிகளிலும் சுங்க கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

தினமும் 36 ஆயிரம் வாகனங்களில் கட்டணம் வசூலிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 1-ந்தேதி சுங்க கட்டணம் திருத்தி அமைக்கப்படும். வரதராஜபுரத்தில் சுங்கச்சாவடி அமைய உள்ள இடம் வழியாக கடந்த ஆண்டு தினமும் 21,390 வாகனங்கள் சென்றன. அது இந்த ஆண்டு 36,760 ஆகவும், 2042-ம் ஆண்டு 58,227 ஆகவும் உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கொளப்பஞ்சேரியில் இந்த ஆண்டு நாள் ஒன்றுக்கு வாகனங்களின் எண்ணிக்கை 35,760 ஆகவும், பழவேடு பகுதியில் 24,723 ஆகவும், சின்ன முல்லைவாயலில் 12,557 ஆகவும் உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் எதிர்பார்த்த கட்டண வசூல் கிடைக்கா விட்டால் ஒப்பந்த காலத்தை நீட்டிக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த சுங்கச்சாவடி பகுதிகளில் வசிப்பவர்களின் வணிகம் அல்லாத வாகனங்கள் மட்டும் கட்டணமின்றி பயணிக்க அனுமதிக்கப்படும்.

Tags:    

Similar News