உளவுத்துறை ஐ.ஜி. மாற்றம்- தமிழக அரசு அதிரடி
- தமிழக காவல்துறையில் 12 அதிகாரிகளுக்கு புதிய பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.
- உளவுத்துறை புதிய ஐஜியாக செந்தில் வேலன் நியமிக்கப்பட்டுள்ளார்.
சென்னை:
தமிழகத்தில் காவல்துறையின் 12 அதிகாரிகளுக்கு புதிய பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. குறிப்பாக, உளவுத்துறை ஐஜியாக இருந்த ஆசியம்மாள் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். அவர் அமலாக்கப்பிரிவு ஐஜியாக நியமிக்கப்பட்டுள்ளார். உளவுத்துறை புதிய ஐஜியாக செந்தில் வேலன் நியமிக்கப்பட்டுள்ளார். கள்ளக்குறிச்சி மாவட்டம் கனியாமூர் கலவரத்துக்கு உளவுத்துறையின் தோல்வியும் ஒரு காரணம் என விமர்சனம் எழுந்த நிலையில், உளவுத்துறை ஐஜி மாற்றப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
இதேபோல் வள்ளியூர் சப்-டிவிஷன் ஏஎஸ்பி சமய் சிங் மீனா, மதுராந்தகம் சப்-டிவிஷன் ஏஎஸ்பி கிரண் ஸ்ருதி, பவானி சப்-டிவிஷன் ஏஎஸ்பி தீபக் சிவாச், கோட்டக்குப்பம் சப்-டிவிஷன் ஏஎஸ்பி ஹர்ஷ் சிங், திருத்தணி சப்-டிவிஷன் ஏஎஸ்பி சாய் பிரனீத் ஆகியோர் எஸ்.பி.யாக பதவி உயர்வு பெற்றுள்ளனர்.
சென்னை பூக்கடை துணை கமிஷனர் மகேஷ்வரன் மனித உரிமைகள் ஆணைய எஸ்.பி.யாகவும், சென்னை வடக்கு போக்குவரத்து பிரிவு துணை கமிஷனர் ஆல்பர்ட் ஜான், பூக்கடை துணை கமிஷனராகவும், ஆவடி டிஎஸ்பி-வி பட்டாலியன் எஸ்பி ராதாகிருஷ்ணன் சீருடைப் பணியாளர் தேர்வாணைய எஸ்.பி.யாகவும், சென்னை சைபர் கிரைம் பிரிவு துணை கமிஷனர் தேஷ்முக் சேகர் சஞ்சய் திருவல்லிக்கேணி துணை கமிஷனராகவும், எஸ்.பி. கண்ணன் சென்னை நவீனமயமாக்கல் பிரிவு உதவி ஐஜியாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இதுதொடர்பான அறிவிப்பை தமிழக அரசின் கூடுதல் தலைமைச் செயலாளர் பணீந்திர ரெட்டி இன்று வெளியிட்டுள்ளார்.