தமிழ்நாடு

ஆட்சியிலும், அதிகாரத்திலும் பங்கு வேண்டும் என்று நினைப்பதில் தவறு கிடையாது- ஜி.கே.வாசன்

Published On 2024-09-16 07:30 GMT   |   Update On 2024-09-16 07:31 GMT
  • மதுவில்லா தமிழகம் என்று ஒரு கோடி கையெழுத்து வாங்கி ஆளுநரிடம் கொடுத்து இருக்கின்றோம்.
  • மது ஒழிப்பை பொறுத்த வரையில் தமிழகத்தில் பெரும்பாலான கட்சிகள் உறுதியாக இருக்கிறார்கள்.

தூத்துக்குடி:

நெல்லையில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் சென்னையில் இருந்து விமானம் மூலம் தூத்துக்குடிக்கு வந்தார்.

தொடர்ந்து அவர் விமான நிலையத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:-

தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் உறுப்பினர் சேர்க்கை 1-ந்தேதி தொடங்கி தமிழக முழுவதும் நடந்து கொண்டிருக்கிறது. இந்த பணி வருகிற 15-ந்தேதி முடிவடையும். திருமாவளவன் ஆட்சி அதிகாரத்தில் பங்கு வேண்டும் என்று கூறுகிறார்.

1999-ம் ஆண்டு முதலே தமிழ் மாநில காங்கிரஸ் நிறுவனத் தலைவர் மூப்பனார் தலைமையில் ஒரு அணி பாராளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் அமைந்த போது இந்த கருத்து வலுவாக அப்போது கூறப்பட்டது.

தமிழகத்தில் உள்ள அனைத்து கட்சிகளிலும் உள்ள தொண்டர்கள் ஆட்சியிலும், அதிகாரத்திலும் உரிமை உள்ளது என்று கூறுவதே தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் எண்ணம்.

அதே நேரத்தில் ஒரு இலக்கு இருக்க வேண்டும். என்னவென்றால் கூட்டணியோடு தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்ற இலக்கோடு பணியாற்ற வேண்டும். இலக்கை நாம் சரியாக முறையாக பயன்படுத்திக் கொண்டால் நிச்சயமாக வருங்காலத்தில் தொண்டர்கள், தலைவர்கள் நினைப்பது போல எண்ணிக்கைக்கு ஏற்றவாறு ஆட்சியிலும், அதிகாரத்திலும் பங்கு பெறுவதற்கான வாய்ப்பு நிறைய இருக்கிறது.

முழு பூசணிக்காயை எந்த கட்சி வேண்டுமானாலும் சோற்றில் மறைக்க பார்க்கலாம். ஆனால் உண்மை நிலை இதுவாக தான் இருக்க முடியும். ஆட்சியில், அதிகாரத்தில் பங்கு வேண்டும் என்று நினைப்பது இந்த கால அரசியலில் எந்த கட்சி தொண்டர்கள் நினைத்தாலும் அது தவறு கிடையாது.

மது ஒழிப்பை பொறுத்த வரையில் தமிழகத்தில் பெரும்பாலான கட்சிகள் உறுதியாக இருக்கிறார்கள். தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் காலத்தில் இருந்து மதுவில்லா தமிழகம் என்ற கொள்கையை உறுதிப்பட எல்லா கூட்டங்களிலும் பேசிக்கொண்டு இருக்கின்றோம். படிப்படியாக தமிழகத்தில் மது ஒழிப்பு தேவை என்பதை வலியுறுத்திக் கொண்டு இருக்கின்றோம்.

மதுவில்லா தமிழகம் என்று ஒரு கோடி கையெழுத்து வாங்கி ஆளுநரிடம் கொடுத்து இருக்கின்றோம் என்றால் அது தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி மட்டும் தான். எனவே பல வழிகளில் போராட்டம், ஆர்ப்பாட்டம், உண்ணாவிரதம் போன்றவை நடத்தி இருக்கின்றோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

பேட்டியின் போது தூத்துக்குடி மத்திய மாவட்ட தலைவர் எஸ்.டி.ஆர். விஜய சீலன், தெற்கு மாவட்ட தலைவர் சுந்தரலிங்கம், மாநகர தலைவர் ரவிக் குமார் உட்பட நிர்வாகிகள் பலர் உடன் இருந்தனர்.

Tags:    

Similar News