தமிழ்நாடு

விடுதலை சிறுத்தைகள் மது ஒழிப்பு மாநாடு ஓர் அரசியல் நாடகம்: கருணாஸ்

Published On 2024-09-15 01:58 GMT   |   Update On 2024-09-15 01:58 GMT
  • சாதி, மத வேறுபாடு இன்றி அனைவரையும் தமிழர்களாக இணைத்து மது ஒழிப்பு மாநாட்டை நடத்தலாம்.
  • இப்போதைய நிலையில் நடிகர் விஜய் கூட தனித்து தேர்தலில் நிற்க முடியாது.

மதுரை:

முக்குலத்தோர் புலிப்படை நிறுவனத்தலைவரும், நடிகருமான கருணாஸ் மதுரையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

முத்துராமலிங்க தேவரின் குருபூஜையை முன்னிட்டு தேசத்திற்காக போராடியவர்களின் போராட்டங்கள், தியாகங்கள் குறித்து எடுத்துரைத்து பேச தமிழகம் முழுவதும் தொடர்ச்சியாக பயணம் செய்து சொற்பொழிவு நடத்த இருக்கிறேன். சமூக வலைத்தளங்களின் மூலம் தற்போதைய இளைஞர்கள் மத்தியில் தவறான தகவல்கள் சென்றடைந்து விடுகின்றன. இதனை மாற்றி உண்மையான வரலாற்றை மக்களை சந்தித்து பேச இருக்கிறேன். அன்னபூர்ணா ஓட்டல் உரிமையாளர் உண்மையை பேசினார். அவரை கட்டாயப்படுத்தி மன்னிப்பு கேட்கவைத்துள்ளனர். இது சர்வாதிகாரபோக்கு. இதை ஒட்டு மொத்த தமிழக மக்கள் மற்றும் தமிழக வியாபாரிகளின் அவமானமாக கருதுகிறேன். பிரதமர் டுவிட்டர், பேஸ்புக்கில் கருத்து சொல்கிறார். அதற்கு பதில் அளிக்கும் வகையில் நாங்களும் சமூகவலைத்தளங்கள் மூலம் பதில் அளித்து வருகிறோம். அரசியலுக்கு வருவது எளிதல்ல. நடிகர் விஜய்யின் கொள்கை, சித்தாந்தம் குறித்து பேசினால், அதன்பின்னர் அவருடன் கூட்டணி வைப்பது பற்றி யோசிக்கலாம்.

விடுதலை சிறுத்தைகள் நடத்தும் மது ஒழிப்பு மாநாட்டுக்கு எனக்கு அழைப்பு இல்லை. சாதி, மத அமைப்புகளுக்கு அழைப்பு இல்லை என்கிறார் திருமாவளவன். இவ்வளவு நாள் அவர் என்ன செய்தார்?. பா.ம.க. சாதிக்கட்சி என்றால், விடுதலை சிறுத்தைகள் என்ன கட்சி?. அர்ஜூன் ரெட்டி விடுதலை சிறுத்தைகளில் சேர்ந்ததால் அது தேசிய கட்சியாக மாறிவிட்டதா?.

அக்கட்சி செய்வது பொது அரசியலா? சுய அரசியலா? என்பது தெரியவில்லை. சாதி, மத வேறுபாடு இன்றி அனைவரையும் தமிழர்களாக இணைத்து மது ஒழிப்பு மாநாட்டை நடத்தலாம். மது ஒழிப்பு மாநாடு என்பது ஓர் அரசியல் நாடகமாக இருக்கிறது. இப்போதைய நிலையில் நடிகர் விஜய் கூட தனித்து தேர்தலில் நிற்க முடியாது. நான் தனித்து நின்றால், நானும் எனது மனைவியை தவிர யாரும் ஓட்டு போடமாட்டார்கள். இது கள யதார்த்தம்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News