வேடசந்தூர் அருகே சேவல் சண்டை சூதாட்டம் நடத்திய 10 பேர் கைது
- பல ஊர்களை சேர்ந்த வாலிபர்கள் வந்து கலந்து கொள்வதாக போலீசாருக்கு புகார்கள் வந்த வண்ணம் இருந்தது.
- சூதாட்டத்தின்போது அடிக்கடி தகராறு ஏற்பட்டு வருவதால் சட்டம் ஒழுங்கு பிரச்சினையும் ஏற்படுகிறது.
வேடசந்தூர்:
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் மற்றும் சுற்றுப்புற பகுதியில் உள்ள பல்வேறு கிராமங்களில் இரவு நேர சூதாட்டம் நடைபெற்று வருகிறது. இதில் பல ஊர்களை சேர்ந்த வாலிபர்கள் வந்து கலந்து கொள்வதாக போலீசாருக்கு புகார்கள் வந்த வண்ணம் இருந்தது.
பணம் வைத்து சூதாட்டம் மட்டுமின்றி சேவல்களை களத்தில் விட்டும் சூதாட்டம் நடைபெறுவதாகவும், அதன்படி வேடசந்தூர் டி.எஸ்.பி. உத்தரவின் பேரில் இன்ஸ்பெக்டர் பாலமுருகன் தலைமையிலான போலீசார் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.
கோடாங்கிபட்டி பகுதியில் சேவல்களை வைத்து சூதாட்டம் நடைபெற்றது தெரிய வரவே அங்கிருந்தவர்களை சுற்றி வளைத்தனர். சூதாட்டத்தில் ஈடுபட்ட விஜயகுமார், செல்வக்குமார், கனகராஜ், பிரபாகரன், ரஞ்சித்குமார், ஆனந்தன், சிவசெல்வன், தளபதி, முத்துச்சாமி உள்பட 10 பேரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 2 சொகுசு கார்கள், 12 மோட்டார் சைக்கிள்கள், 4 சேவல்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
மேலும் சூதாட்டத்திற்கு பயன்படுத்தப்பட்ட பயணத்தையும் போலீசார் கைப்பற்றினர். மேலும் சிலர் தப்பி ஓடியதால் அவர்களையும் தேடி வருகின்றனர். கிராமப்புறங்களில் தொடர்ந்து சூதாட்டம் நடத்தப்பட்டு வருவதால் பலர் பணம், நகை உள்ளிட்ட பொருட்களை இழந்து செல்கின்றனர். மேலும் சூதாட்டத்தின்போது அடிக்கடி தகராறு ஏற்பட்டு வருவதால் சட்டம் ஒழுங்கு பிரச்சினையும் ஏற்படுகிறது.
எனவே போலீசார் தொடர்ந்து சோதனை நடத்தி இதுபோன்ற சூதாட்டங்களை தடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.