தமிழ்நாடு

12 மணி நேர வேலையால் தமிழகத்தில் தொழில் வளம் பெருகும்- விக்கிரமராஜா பேட்டி

Published On 2023-04-25 07:00 GMT   |   Update On 2023-04-25 08:39 GMT
  • தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட 12 மணிநேர வேலை மசோதாவால் தமிழகத்தில் தொழில்துறை வளர்ச்சி அடையும்.
  • எதிர்கட்சிகள் கண்மூடித்தனமாக எதிர்க்க கூடாது. தோழமை கட்சிகளும் சாதக, பாதகங்களை உணர்ந்து அரசுக்கு எடுத்துக்கூறி இந்த மசோதாவுக்கு ஆதரவு தெரிவிக்க வேண்டும்.

திண்டுக்கல்:

தமிழ்நாடு தொழில் வர்த்தகர் சங்கத்தின் மாநில தலைவர் விக்கிரமராஜா இன்று திண்டுக்கல்லில் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது, தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட 12 மணிநேர வேலை மசோதாவால் தமிழகத்தில் தொழில்துறை வளர்ச்சி அடையும். தமிழகம் ஏற்கனவே அதிகளவு தொழில் முதலீடுகளை ஈர்த்து வருகிறது. இந்த சூழ்நிலையில் தொழிலாளர்கள் கூடுதல் நேரம் பணி செய்தால் அவர்களுக்கான ஊதியமும் அதிகரிக்கும். வேலை வாய்ப்பும் பெருகும். கொரோனா கால கட்டத்தில் வடமாநில தொழிலாளர்கள் இல்லாத சூழ்நிலையில் தமிழகத்தின் நிலையை எண்ணிப்பார்க்க வேண்டும்.

இதனை எதிர்கட்சிகள் கண்மூடித்தனமாக எதிர்க்க கூடாது. தோழமை கட்சிகளும் சாதக, பாதகங்களை உணர்ந்து அரசுக்கு எடுத்துக்கூறி இந்த மசோதாவுக்கு ஆதரவு தெரிவிக்க வேண்டும். எந்த நிறுவனமும் தொழிலாளிகள் இல்லாமல் முதலாளிகள் இல்லை. அதேபோல முதலாளிகள் இல்லாமல் தொழிலாளிகளும் இல்லை.

தொழில்துறை வளர்ச்சியை கருத்தில் கொண்டும், இளைஞர்களின் வேலை வாய்ப்பை கருத்தில் கொண்டும் 12 மணிநேர வேலை மசோதவை தொழிற்சங்கங்களும், தோழமை கட்சிகளும் ஆதரவு தெரிவிக்க வேண்டும் என்றார். மேலும் மே 5-ந்தேதி ஈரோட்டில் வணிகர் உரிமை முழக்க மாநாடு, வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் 40-வது மாநில மாநாடு நடைபெற உள்ளது.

இந்த மாநாட்டில் திண்டுக்கல் மண்டலம் சார்ந்த திண்டுக்கல், பழனி, தேனி, கரூர் ஆகிய 4 மாவட்டங்களில் இருந்து 15 ஆயிரம் வணிகர்கள் கலந்து கொண்டு சிறப்பிக்க வேண்டும். உள்ளாட்சி அமைப்புகளில் பணிநிறைவு சான்றிதழ்கள் பெற்றால்தான் வணிக கட்டிடங்களுக்கு புதிய மின்இணைப்பு வழங்கப்படும் என்ற மின்சார வாரியத்தின் கொள்கை முடிவை மாற்றி அமைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கூட்டத்தில் மண்டல தலைவர் கிருபாகரன், மாவட்ட செயல்தலைவர் நடராஜன், மாவட்ட செயலாளர் மங்களம் அழகு, பொருளாளர் நசீர்சேட் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News