தமிழ்நாடு

ஊட்டியில் 1.3 செல்சியஸ் வெப்பநிலை: கொட்டும் உறைபனியில் வெண்மையாக மாறிய பச்சை புல்வெளிகள்

Published On 2024-01-28 05:50 GMT   |   Update On 2024-01-28 05:50 GMT
  • நீலகிரி மாவட்டத்தின் பெரும்பாலான பகுதிகள் தற்போது வெள்ளை கம்பளம் விரித்தாற்போல காணப்படுகிறது.
  • பெரிய நீா்நிலைகள் மற்றும் சதுப்பு நிலங்களில் தற்போது நீா்ப்பனி ஆவியாகி கடும் பனிமூட்டமாக காட்சி அளிக்கிறது.

ஊட்டி:

நீலகிரி மாவட்டத்தில் ஆண்டுதோறும் நவம்பர் முதல் பிப்ரவரி வரை உறைபனிக்காலம் ஆகும். ஆனால் நடப்பாண்டு புயல் மழை காரணமாக ஜனவரி மாதத்தில் பனிப்பொழிவு தாமதமாக தொடங்கியது. இதனால் ஊட்டி, காந்தல், தலைகுந்தா மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கடும் பனிமூட்டம் தென்படுகிறது.

அங்கு கடந்த ஒருவார காலமாக தொடர்ந்து குளிர் நிலவுவதால், பொதுமக்களின் இயல்புவாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டு உள்ளது.

உறைபனி மற்றும் கடுங்குளிரால் பொதுமக்கள் அதிகாலை நேரத்தில் வீட்டை விட்டு வெளியே வர முடியாமல் அவதிப்பட்டு வருகின்றனர். இதனால் பொதுமக்கள் மற்றும் டிரைவர்கள் சாலையோரங்களில் தீமூட்டி குளிா்காய்ந்து வருகின்றனா்.

நீலகிரி மாவட்டத்தின் பெரும்பாலான பகுதிகள் தற்போது வெள்ளை கம்பளம் விரித்தாற்போல காணப்படுகிறது. மேலும் பச்சை புல்வெளிகள் மற்றும் வாகனங்களில் பனிப்படலத்தை பார்க்க முடிகிறது.

குதிரை பந்தய மைதானம் மற்றும் ஊட்டியின் சுற்றுவட்டார பகுதிகளில் வெள்ளை உறைபனி பெய்வதால், வீடுகளின் முன்பாக நிறுத்தப்பட்டு இருக்கும் வாகனங்களில் ஒரு அங்குலம் வரை பனிக்கட்டிகள் காணப்படுகின்றன.

நீலகிரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக உறைபனியின் நகராக ஊட்டி மாறிவருகிறது. இன்று வெப்பநிலை 1.3 டிகிரி செல்சியஸ் அளவுக்கு குறைந்து இருப்பதுடன், 72 சதவீதம் ஈரப்பதம் பதிவாகி உள்ளது.

மேலும் பெரிய நீா்நிலைகள் மற்றும் சதுப்பு நிலங்களில் தற்போது நீா்ப்பனி ஆவியாகி கடும் பனிமூட்டமாக காட்சி அளிக்கிறது.

Tags:    

Similar News