தமிழ்நாடு

கோடை வெயில் கொளுத்தும் நிலையில் திருச்சி மண்டலத்தில் 'ஜில் பீர்' விற்பனை

Published On 2024-04-24 03:59 GMT   |   Update On 2024-04-24 03:59 GMT
  • டாஸ்மாக் மதுபான கடைகளில் பீர் விற்பனை அதிகரித்துள்ளது.
  • கடந்த ஆண்டு டின் பீர் மட்டுமே விற்பனை செய்யப்பட்டது.

திருச்சி:

தமிழகத்தில் கடந்த சில வாரங்களாக வெயில் சுட்டெரிக்கிறது. பொதுவாக அக்னி நட்சத்திரம் என அழைக்கப்படும் கத்தரி வெயில் காலமான மே மாதத்தில் தான் வெயிலின் உக்கிரம் இந்த அளவுக்கு இருக்கும். ஆனால் முன்பாகவே மேலும் தாக்கம் கடுமையாக உள்ளது.

அதிலும் திருச்சி, கரூர் உள்ளிட்ட மாவட்டங்களில் தினமும் வெயில் சதம் அடித்து வருகிறது. இதனால் வெப்ப தாக்குதலில் இருந்து தப்பிக்க பொதுமக்கள் குளிர்பானங்களை அதிகம் நாடி வருகின்றனர்.

ஆனால் மது பிரியர்கள் வெயிலின் தாக்கத்திலிருந்து தப்பிக்க ஜில் பீர் அதிகம் குடிக்க தொடங்கியுள்ளனர். இதனால் டாஸ்மாக் மதுபான கடைகளில் பீர் விற்பனை அதிகரித்துள்ளது.

திருச்சி மாவட்டத்தில் கடந்த 2 மாதங்களில் ஜில் பீர் விற்பனை 2 மடங்காக அதிகரித்து உள்ளது. டாஸ்மாக் கடைகளில் ஜில் பீருக்காக கூட்டம் அலை மோதுகிறது.

இதுபற்றி திருச்சி மண்டல டாஸ்மாக் அதிகாரி ஒருவர் கூறும்போது, கடந்த 2 மாதங்களில், பீர் விற்பனை 8 சதவீதம் முதல் 16 சதவீதம் வரை அதிகரித்துள்ளது. திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மாயிலாடுதுறை, புதுக்கோட்டை, கரூர், பெரம்பலூர் மற்றும் அரியலூர் ஆகிய பகுதிகளில் மொத்தம் 18 ஆயிரம் பீர் பெட்டிகள் விற்பனை ஆகியுள்ளது.

வருகிற மே மாதத்தில் விற்பனை 18 முதல் 20 சதவீதம் வரை உயரும் என எதிர்பார்க்கிறோம். மேலும், கடந்த ஆண்டு டின் பீர் மட்டுமே விற்பனை செய்யப்பட்டது. ஆனால், தற்போது 8 டிப்போக்களிலும் தேவைக்கு ஏற்ப பீர் பாட்டில்கள் வழங்கப்படுகின்றன.

பாராளுமன்றத் தேர்தல் கட்டுப்பாடுகள் காரணமாக சில நாட்கள் விடுமுறை விடப்பட்டதால் விற்பனை மந்தமாக இருந்தது. தற்போது விற்பனை சூடு பிடித்துள்ளது என தெரிவித்தார்.

திருச்சி பாலக்கரை பகுதியில் உள்ள ஒரு டாஸ்மாக் மேற்பார்வையாளர் கூறும் போது, சமீபத்தில் சாதாரண பீர் பாட்டில்களின் விலை ரூ.170லிருந்து ரூ.230 ஆக உயர்ந்துள்ளது. விலை உயர்ந்தாலும் அது விற்பனையில் பாதிப்பை ஏற்படுத்தவில்லை. பகலில் பீர் விற்பனை அதிகமாக நடக்கிறது என்றார்.

Tags:    

Similar News