தமிழ்நாடு

பொங்கல் கொண்டாட சொந்த ஊர் சென்றவர்கள் சென்னை திரும்ப இன்று 1,941 சிறப்பு பஸ்கள் இயக்கம்

Published On 2023-01-17 04:14 GMT   |   Update On 2023-01-17 04:14 GMT
  • பொங்கல் விடுமுறை முடிந்து நாளை முதல் பள்ளி, கல்லூரிகள் மற்றும் அரசு அலுவலகங்கள் வழக்கம் போல் செயல்பட தொடங்க உள்ளன.
  • சொந்த ஊர் சென்றவர்கள் இன்று பெருமளவில் சென்னைக்கு புறப்பட வசதியாக 4 ஆயிரம் பஸ்கள் இயக்கப்படுகின்றன.

சென்னை:

பொங்கல் பண்டிகையை கொண்டாட சொந்த ஊர் செல்வதற்காக அரசு போக்குவரத்து கழகங்கள் சார்பில் கடந்த 12-ந்தேதி முதல் 14-ந்தேதி வரை சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. சென்னையில் இருந்து சுமார் 6 லட்சம் பேர் அரசு பஸ்களில் மட்டும் பயணம் செய்துள்ளனர்.

அதே போல பொங்கல் முடிந்து வெளியூர்களில் இருந்து சென்னை திரும்பவும் சிறப்பு பஸ்கள் நேற்று முதல் இயக்கப்படுகின்றன.

தமிழகத்தின் பல்வேறு நகரங்களில் இருந்து சென்னைக்கு கூடுதலாக சிறப்புகள் நேற்று முதல் இயக்கப்பட்டு வருகின்றன. வெளியூர்களில் இருந்து சென்னைக்கு வழக்கமாக 2,100 பஸ்கள் இயக்கப்படுகிறது. அதனுடன் கூடுதலாக பேருந்துகள் விடப்பட்டு உள்ளது.

பொங்கல் விடுமுறை முடிந்து நாளை (18-ந்தேதி) முதல் பள்ளி, கல்லூரிகள் மற்றும் அரசு அலுவலகங்கள் வழக்கம் போல் செயல்பட தொடங்க உள்ளன. இதனால் சொந்த ஊர் சென்றவர்கள் இன்று பெருமளவில் சென்னைக்கு புறப்பட வசதியாக 4 ஆயிரம் பஸ்கள் இயக்கப்படுகின்றன. 2,100 வழக்கமான பஸ்களும், 1,941 சிறப்பு பஸ்களும் இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இது தவிர பிற நகரங்களுக்கு 2,061 சிறப்பு பஸ்கள் கூடுதலாக விடப்பட்டு உள்ளது.

திருநெல்வேலி, நாகர்கோவில், தூத்துக்குடி, மதுரை, தென்காசி உள்ளிட்ட தென் மாவட்ட பகுதியில் இருந்து இன்று மாலையில் இருந்து அதிகளவில் பஸ்கள் சென்னைக்கு இயக்கப்படுகிறது.

வழக்கமான ரெயில்கள், சிறப்பு ரெயில்கள் அனைத்தும் நிரம்பி விட்ட நிலையில் மக்கள் அரசு பஸ்களை மட்டுமே நம்பி உள்ளனர். ஆம்னி பஸ்களிலும் பொதுவாக அதிக கட்டணம் கொடுத்து பயணிக்க இன்று முன்பதிவு செய்துள்ளனர்.

கோவை, திருப்பூர், திருச்சி, பெங்களூர், சேலம், கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, கும்பகோணம், தஞ்சாவூர், மயிலாடுதுறை, நெய்வேலி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து பகல் நேரத்திலும் கூடுதலாக பஸ்கள் விடப்பட்டுள்ளன.

சென்னை-கோவை, மதுரை, திருச்சி பகல் நேர ரெயில்களில் இன்று கூட்டம் நிரம்பி வழிந்தன. இன்று இரவுக்குள் பெரும்பாலானவர்கள் சென்னை வந்து சேர திட்டமிட்டு பயணத்தை தொடங்கி உள்ளனர்.

இதே போல நீண்ட தூரத்தில் இருந்து கார்களில் பயணம் செய்யக்கூடியவர்களும் காலையில் பயணத்தை தொடங்கியுள்ளனர்.

இன்று மாலையில் புறப்பட்டு வரக்கூடிய அனைத்து அரசு, தனியார் ஆம்னி பஸ்களும் அதிகாலையில் சென்னைக்கு வந்து விடும். இதனால் பெருங்களத்தூர், கோயம்பேடு பஸ் நிலைய பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்படாத வகையில் சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மெட்ரோ ரெயில் சேவையும் நாளை (18-ந்தேதி) காலை 5 மணி முதல் இயக்கப்படுகிறது. மாநகர பஸ் சேவையும் அதிகரிக்கப்பட்டுள்ளது. வெளியூர் சென்றவர்கள் சென்னை திரும்புவதற்கு வசதியாக இணைப்பு பேருந்து வசதி செய்யப்பட்டுள்ளது.

Tags:    

Similar News