ஆலங்குளம் அருகே வேகமாக பரவுகிறது: மர்ம காய்ச்சலுக்கு 2 சிறுமிகள் பலி
- தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே மர்ம காய்ச்சலுக்கு 2 சிறுமிகள் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
- சுகாதாரத்துறை அதிகாரிகள் அப்பகுதியில் முகாமிட்டு சிறுமிகள் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு இறந்தார்களா? அல்லது வேறு ஏதேனும் மர்ம காய்ச்சல் அவர்களுக்கு ஏற்பட்டதா? என்று ஆய்வு செய்து வருகின்றனர்.
ஆலங்குளம்:
தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே உள்ள காசிநாதபுரம் கீழ தெருவை சேர்ந்தவர் பழனி. கூலி தொழிலாளி. இவரது மகள் சுப்ரியா(வயது 7). இவர் அப்பகுதியில் உள்ள பள்ளியில் 2-ம் வகுப்பு படித்து வந்தார். அதே பகுதியை சேர்ந்தவர் சொரிமுத்து.
இவரது மகள் பூமிகா(6). இவர் அப்பகுதியில் உள்ள பள்ளியில் 1-ம் வகுப்பு படித்து வந்தார். கடந்த சில நாட்களுக்கு முன்பு இந்த 2 சிறுமிகளுக்கும் மர்ம காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. அதன் பாதிப்பு தீவிரம் அடைந்ததால் தென்காசி அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர். பின்னர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று இரவு பூமிகா உயிரிழந்தார். மிகவும் கவலைக்கிடமாக இருந்த சிறுமி சுப்ரியாவும் இன்று அதிகாலை பரிதாபமாக இறந்தார். இதுதொடர்பாக தகவல் அறிந்த ஆலங்குளம் போலீசார் மற்றும் சுகாதாரத்துறையினர் காசிநாதபுரம் கிராமத்திற்கு சென்று ஆய்வு செய்து வருகின்றனர். அங்கு சுகாதாரத்துறை அதிகாரிகள் முகாமிட்டு சிறுமிகள் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு இறந்தார்களா? அல்லது வேறு ஏதேனும் மர்ம காய்ச்சல் அவர்களுக்கு ஏற்பட்டதா? என்று ஆய்வு செய்து வருகின்றனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு அந்த பகுதியில் சுமார் 20-க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு மர்ம காய்ச்சல் பரவியது.
இதையடுத்து அங்கு சுகாதாரத்துறை அதிகாரிகள் முகாமிட்டு ஆய்வு செய்ததில், வாசுதேவநல்லூர் கூட்டு குடிநீர் திட்டத்தில் காசிநாதபுரத்தின் வழியாக குழாய்கள் பதிக்கப்பட்டு உள்ளது. அதில் ஏற்பட்ட உடைப்பில் இருந்து வெளியேறும் நீரை அந்த கிராமத்தை சேர்ந்த மக்கள் எடுத்து பயன்படுத்தியது தான் மர்ம காய்ச்சலுக்கு காரணம் என கண்டுபிடித்தனர். தொடர்ந்து அங்கு தெருக்கள் தோறும் பிளீச்சிங் பவுடர் தூவினர். ஆலங்குளம் சுற்றுவட்டார கிராமங்களான மருதம்புத்தூர், கண்டபட்டி, புதுப்பட்டி, காசிநாதபுரம், காத்தபுரம், உடையாம்புளி, இலந்தகுளம் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட கிராமங்களில் வாரத்திற்கு ஒரு முறைதான் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருவதாக அப்பகுதியினர் புகார் தெரிவித்து வருகின்றனர்.
இதுகுறித்து அப்பகுதியினர் கூறுகையில், முக்கூடல் தாமிரபரணி ஆற்றில் இருந்து 10 கிலோமீட்டருக்கும் குறைவாகவே இந்த கிராமங்கள் உள்ளன. வற்றாத ஜீவநதி ஓடும் எங்கள் பகுதியில் கடும் குடிநீர் தட்டுப்பாடு நிலவி வருகிறது. இந்த நிலை பல ஆண்டுகளாக நீடிக்கிறது. எங்களை கடந்து சங்கரன்கோவில், வாசுதேவநல்லூர், ராஜபாளையம் உள்ளிட்ட பகுதிகளுக்கு பல கிலோமீட்டர் தூரம் கடந்து குடிதண்ணீர் செல்கிறது. ஆனால் எங்களுக்கு வாரம் ஒரு முறை குடிநீர் வருவதே கடினமாக உள்ளது. இதுகுறித்து பொதுப்பணித்துறை அதிகாரிகள் உள்பட அனைவரிடமும் முறையிட்டாலும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதே துயர நிலை தான் நீடிக்கிறது என்றனர்.