பிளஸ்-2 முடித்த மாணவர்களுக்கு இன்று முதல் 3 நாட்கள் ஆலோசனை
- பொறியியல் கலந்தாய்வு ஓரிரு நாட்களில் தொடங்க உள்ளது.
- கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளுக்கான சேர்க்கையும் நடைபெற்று வருகிறது.
சென்னை:
உயர் கல்வி சேர்க்கையை எதிர்நோக்கி இருக்கும் மாணவர்களுக்கு வழிகாட்டுதல்கள் மற்றும் ஆலோசனைகளை வழங்க அரசு சார்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து பள்ளிக்கல்வி ஆணையர் க.நந்தகுமார் அனைத்து மாவட்ட முதன்மைக்கல்வி அதிகாரிகளுக்கு சுற்றறிக்கை அனுப்பி உள்ளார்.
நிகழாண்டில் பிளஸ்-2 முடித்த மாணவர்கள் உயர்கல்வியில் சேர உள்ளனர்.
பொறியியல் கலந்தாய்வு ஓரிரு நாட்களில் தொடங்க உள்ளது. கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளுக்கான சேர்க்கையும் நடைபெற்று வருகிறது. மேலும், உயர்கல்வி குறித்த பல்வேறு நுழைவுத் தேர்வுகளின் முடிவுகளும் வர உள்ளன.
இந்த நிலையில் பள்ளிகளில் இன்று முதல் வருகிற 9-ந் தேதி (வெள்ளிக்கிழமை) வரை உயர்கல்வி சேர்க்கை குறித்த தகவல்கள், நுழைவுத்தேர்வு முடிவுகளை எதிர்கொள்ளுதல் மற்றும் திட்டமிடுதல் சார்ந்து ஆலோசனைகள் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதையடுத்து அரசு மேல்நிலைப்பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் பிளஸ்-2 முடித்து உயர்கல்வி பயில உள்ள மாணவர்கள் மற்றும் பெற்றோர்களை வரவழைத்து இந்த 3 நாட்களும் உரிய ஆலோசனைகள் வழங்கி உதவ வேண்டும்.
இதுதவிர கூடுதல் உதவிகளுக்கு அரசின் வழிகாட்டு மையத்தை 14417 என்ற எண் வழியாகவோ அல்லது மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகங்களில் அமைக்கப்பட்டுள்ள சிறப்பு மையங்களில் நேரிலும் தொடர்பு கொள்ளலாம்.
ஆலோசனையின்போது மாணவர்களிடம் பதற்றம், கவலை, குழப்பம் போன்ற உணர்வுகள் தென்பட்டால் உடனடியாக 104 எண்ணுக்கு தொடர்பு கொண்டு நிபுணர்கள் மூலம் ஆலோசனைகள் வழங்கிவிட வேண்டும். இந்த பணிக்கு அனுபவமிக்க தன்னார்வலர்களையும் பயன்படுத்திக்கொள்ளலாம். இதுசார்ந்த வழிகாட்டுதல்களை பின்பற்றி மாணவர்களுக்கு தேவையான ஆலோசனைகள் வழங்குவதற்கான நடவடிக்கைகளை அந்தந்த மாவட்ட முதன்மைக்கல்வி அதிகாரிகள் மேற்கொள்ள வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.