தமிழ்நாடு

எண்ணூரில் 33 கிராம மக்கள் போராட்டம்- கடை அடைப்பு

Published On 2024-02-06 07:32 GMT   |   Update On 2024-02-06 08:06 GMT
  • அமோனியா வாயு கசிவு ஏற்பட்ட தொழிற்சாலையை தற்காலிகமாக மூட தமிழக அரசு உத்தரவிட்டது.
  • கடைவீதிகள் வெறிச்சோடி காணப்பட்டது.

திருவொற்றியூர்:

எண்ணூர் பெரிய குப்பத்தில் தனியார் உரத்தொழிற்சாலை உள்ளது. இந்த தொழிற்சாலையில் கடந்த டிசம்பர் மாதம் திடீரென அமோனியா வாயு வெளியேறியது. இதனால் அப்பகுதியை சுற்றி உள்ள பொது மக்களுக்கு மூச்சுத் திணறல், வாந்தி மயக்கம் உள்ளிட்ட உபாதைகள் ஏற்பட்டது. அவர்கள் அனைவரும் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர்.

இதைத்தொடர்ந்து அமோனியா வாயு கசிவு ஏற்பட்ட தொழிற்சாலையை தற்காலிகமாக மூட தமிழக அரசு உத்தரவிட்டது. வாயு கசிவு ஏற்பட்டது தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது. பசுமை தீர்ப்பாயத்திலும் விசாரணை நடைபெற்று வருகிறது.


இந்த நிலையில் உரத்தொழிற்சாலையை நிரந்தரமாக மூட வேண்டும் என்று கோரிக்கை விடுத்து எண்ணூரை சுற்றி உள்ள 33 மீனவ கிராமமக்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். தினமும் ஒவ்வொரு கிராமத்தை சேர்ந்த மக்கள் மீன்பிடிக்க செல்லாமல் தொழிற்சாலை முன்பு போராட்டம் நடத்தி வந்தனர். அவர்களது போராட்டம் இன்று 42-வது நாளாக நீடித்தது.

இதற்கிடையே வாயு கசிவு ஏற்பட்ட உரத்தொழிற்சாலையை நிரந்தரமாக மூடக்கோரி எண்ணூர் முதல் தாழங்குப்பம் வரை உள்ள 33 மீனவ கிராம மக்கள் இன்று கடை அடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்பகுதியில் உள்ள சுமார் 1000-க்கும் மேற்பட்ட கடைகள் அடைக்கப்பட்டு உள்ளன. இதனால் கடைவீதிகள் வெறிச்சோடி காணப்பட்டது.


இந்த நிலையில் மீனவ கிராமமக்கள் இன்று காலை திடீரென அன்னை சிவகாமி நகர், தாழங்குப்பம், பெரியகுப்பம், சின்னகுப்பம் உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவல் அறிந்ததும் போலீசார் விரைந்து வந்து மறியலில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது போலீசாருக்கும் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. தொடர்ந்து மீனவ கிராம மக்கள் ஆங்காங்கே மறியலில் ஈடுபட்டு வருவதால் பதட்டமான சூழல் ஏற்பட்டு உள்ளது. துணை போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் தலைமையில் சுமார் 500-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர். அன்னை சிவகாமி நகர் முதல் எண்ணூர் மேம்பாலம் வழியாக போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

உரத்தொழிற்சாலை முன்பும் சுமார் 100-க்கும் மேற்பட்டோர் திரண்டு உள்ளனர். அவர்கள் அங்கு போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். ஏராளமான போலீசார் அங்கு குவிக்கப்பட்டு உள்ளனர்.

Tags:    

Similar News