தமிழ்நாடு (Tamil Nadu)

ஒட்டன்சத்திரம் அருகே லாரி மீது அரசு, தனியார் பஸ் மோதி விபத்து- தென்காசி டிரைவர் பலி

Published On 2023-07-22 05:35 GMT   |   Update On 2023-07-22 05:35 GMT
  • அடுத்தடுத்து 3 வாகனங்களும் மோதிக் கொண்டதால் பஸ்சில் இருந்த பயணிகள் கூச்சலிட்டனர்.
  • விபத்தில் தனியார் பஸ் டிரைவர் காளிதாஸ் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தார்.

ஒட்டன்சத்திரம்:

கோவையில் இருந்து தென்காசி நோக்கி 40க்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றிக்கொண்டு ஒரு ஆம்னி பஸ் வந்துகொண்டிருந்தது. இந்த பஸ்சை தென்காசியை சேர்ந்த காளிதாஸ் (வயது36) என்பவர் ஓட்டி வந்தார். இந்த பஸ் திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே பாறைவலசு பிரிவு பகுதியில் இன்று அதிகாலை 3.30 மணி அளவில் வந்து கொண்டிருந்தது.

அப்போது மதுரையில் இருந்து கோவை நோக்கி புண்ணாக்கு ஏற்றிக்கொண்டு ஒரு லாரி வந்தது. கண் இமைக்கும் நேரத்தில் லாரி மீது ஆம்னிபஸ் பயங்கரமாக மோதியது. அப்போது லாரியின் பின்னால் வந்து கொண்டிருந்த அரசு பஸ்சும், பயங்கரமாக மோதியது. அடுத்தடுத்து 3 வாகனங்களும் மோதிக் கொண்டதால் பஸ்சில் இருந்த பயணிகள் கூச்சலிட்டனர். இந்த விபத்தில் தனியார் பஸ் மற்றும் லாரியின் முன் பகுதி சுக்குநூறாக நொறுங்கியது.

விபத்தில் தனியார் பஸ் டிரைவர் காளிதாஸ் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தார். விபத்து குறித்து அம்பிளிக்கை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து இடிபாடுகளில் சிக்கிய 14 பயணிகளை மீட்டு ஒட்டன்சத்திரம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

பின்னர் மேல் சிகிச்சைக்காக அவர்கள் தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டனர். தனியார் பஸ் டிரைவர் தூக்க கலக்கத்தில் லாரி மீது மோதியதே விபத்துக்கு காரணம் என போலீசார் தெரிவித்துள்ளனர்.

இந்த விபத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. நெடுஞ்சாலைத்துறையினர் விபத்தில் சிக்கிய வாகனங்களை அப்புறப்படுத்தி மாற்று வாகனங்கள் மூலம் பயணிகளை அனுப்பி வைத்தனர்.

Tags:    

Similar News