குழாய்களில் கழிவுநீர் கலந்து தண்ணீர் கறுப்பு நிறமாக வருகிறது- பொதுமக்கள் குற்றச்சாட்டு
- குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்ட பகுதி வழியாக கவுநீர் கலந்து வருவதாக தெரிகிறது.
- குழாய் மூலம் வரும் தண்ணீர் தொடர்ந்து கருப்பாகவும், துர்நாற்றமாகவும் வருகிறது.
அடையாறு, கஸ்தூரிபாய் நகர் 6-வது மெயின்ரோடு பகுதியில் உள்ள வீடுகளுக்கு கடந்த சில நாடகளாக கருப்பு நிறத்துடனும், துர்நாற்றத்துடனும் குடிநீர் வருகிறது. மேலும் அப்பகுதியில் உள்ள கழிவுநீர் செல்லும் பாதையில் அடைப்பு ஏற்பட்டு இருந்தது.
இதையடுத்து மாநகராட்சி ஊழியர்கள் கழிவு நீர் அடைப்பை சரிசெய்தனர். பின்னர் தண்ணீர் தொட்டியை சுத்தம் செய்து மெட்ரோ வாட்டர் தண்ணீரை பயன்படுத்தும் படி அப்பகுதி மக்களிடம் தெரிவித்தனர். ஆனாலும் தொடர்ந்து அப்பகுதியில் குடிநீருடன் கழிவு நீர் கலந்து வருகிறது.
இதனால் அப்பகுதி மக்கள் தண்ணீரை பயன்படுத்த முடியாமல் கடும் அவதி அடைந்து வருகிறார்கள்.
குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்ட பகுதி வழியாக கவுநீர் கலந்து வருவதாக தெரிகிறது. இதுபற்றி அப்பகுதி மக்கள் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை என்று குற்றம்சாட்டி உள்ளனர்.
இதுகுறித்து அப்பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் கூறும்போது, கழிவுநீர் அடைப்பை சரிபார்த்த பிறகு குழாய்களில் வரும் தண்ணீரை சேமித்து வைக்கும் தொட்டியை சுத்தம் செய்யச் சொன்னார்கள். நாங்கள் அதை சுத்தம் செய்து எங்கள் தொட்டியின் வால்வை மூடிவிட்டோம். ஆனால் குழாய் மூலம் வரும் தண்ணீர் தொடர்ந்து கருப்பாகவும், துர்நாற்றமாகவும் வருகிறது. இதனால் சிலர் லாரிகளில் முன்பதிவு செய்து தண்ணீர் வாங்கி வருகின்றனர். தண்ணீர் வினியோகத்தில் பாதிப்பு ஏற்படும் போது பதிவு செய்யப்பட்ட எண்ணில் இருந்து தினமும் லாரி தண்ணீரை முன்பதிவு செய்ய அனுமதிக்க வேண்டும். இதனால் தனியார் தண்ணீர் லாரிகளை நம்பியிருக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம். தண்ணீரில் கழிவு நீர் கலந்து வருவது முதல் முறையல்ல. இதேபோல் கடந்த ஆண்டு ஆகஸ்டு, நவம்பர் மாதங்களிலும் தண்ணீர் மிகவும் மோசமாக வந்தது என்றார்.
இதுகுறித்து அதிகாரிகள் கூறும் போது, அந்த பகுதியில் இருந்த கழிவுநீர் அடைப்பு சரிசெய்யப்பட்டது. தண்ணீர் மாசு குறித்து ஆய்வு செய்து வருகிறோம் என்றனர்.
தண்ணீர் மாசு காரணமாக அப்பகுதியில் சிலருக்கு உடல்நலக்குறைவும் ஏற்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது. எனவே கழிவுநீர் கலந்து வரும் தண்ணீரை சரி செய்ய சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.